அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 11- ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. மனுதாரர் சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே கோரியிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி உயா் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.