‘அபேவை பிடிக்கவில்லை, அதனால் கொலை செய்தேன்' – ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ கொலையில் கைதானவர் வாக்குமூலம்

டோக்கியோ: தேர்தல் பிரச்சாரத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் நாளை நடை பெறுகிறது. இதையொட்டி ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று ஜப்பானின் நாரா நகரில் பிரச்சாரம் செய்தார்.

அந்த நகரின் ரயில் நிலையத்தின் முன்பு மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசினார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் பின்னால் இருந்து இளைஞர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்சோ அபேவின் கழுத்து, முதுகில் குண்டுகள் பாய்ந்தன. அதே இடத்தில் அவர் சரிந்து விழுந்தார்.

அங்கிருந்த மருத்துவர்கள் விரைந்து வந்து ஷின்சோ அபேவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து நாரா மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகம் கூறும்போது, ‘‘ஷின்சோ அபே முதுகில் பாய்ந்த குண்டு அவரது இதயத்தை துளைத்து விட்டது. சுமார் 5 மணிநேரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தோம். எனினும் உயிரிழந்துவிட்டார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

கொலையாளி யாமாகாமியை (41) கைது செய்துள்ளோம். கடற்படையின் முன்னாள் வீரரான அவர் குறித்த முழுமையான விவரங்களை திரட்டி வருகிறோம். 3டி தொழில்நுட்பத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மூலம் ஷின்சோ அபேவை சுட்டுள்ளார். ‘அபேவை பிடிக்கவில்லை. அதனால் கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நாரா நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட உலக தலைவர்கள் பலரும் மறைந்த ஷின்சோ அபேவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஒரு நாள் துக்கம்

பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது:

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரது மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுகிறது. மிகச் சிறந்த சர்வதேச அரசியல் தலைவர், நான் குஜராத் முதல்வராக இருந்த போதே அபேவுடன் நட்பு மலர்ந்தது. நான் பிரதமரான பிறகு எங்களது நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம், சர்வதேச விவகாரங்களில் அவரது ஆழ்ந்த அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அண்மையில் ஜப்பான் சென்றிருந்தபோது ஷின்சோ அபேவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதுதான் கடைசி சந்திப்பு என்று அப்போது எனக்கு தெரியாது. இந்திய, ஜப்பான் உறவில் அபேயின் பங்களிப்பு அதிகம். அவருக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது. ஷின்சோ அபேயின் மறைவையொட்டி ஜூலை 9-ம் தேதி இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.