ஜம்மு: அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை மூன்றரை மணியளவில் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு போன்று கனமழை கொட்டியது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதில் 16 பேர் மரணமடைந்திருப்பது உறுதியாகி உள்ளது. 40 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் மூழ்கியுள்ளனர். அவர்களை தேடும் பணியை மோப்ப நாய்களின் உதவியோடு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். துணை ராணுவப்படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமர்நாத் குகையில் ஆண்டுக்கு ஒருமுறை இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த ஜூன் 30ம் தேதி மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஆனால் மேகவெடிப்பில் சிக்கி 15 யாத்திரீகள் மரணமடைந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு மாநில நிர்வாகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கு ஒருவாரத்தில் 72 ஆயிரம் பேர் சென்று வந்துள்ளனர். மேகவெடிப்பில் சிக்கிய 40 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகவும், யாத்ரீகர்கள் யாரும் பயணத்தை தொடர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.