ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரசித்திபெற்ற அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பொதுமக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இதில், இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. மேலும் இந்த புனித யாத்திரை அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் நாளும் வந்துகொண்டிருந்தனர். இதில் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் வரை இரண்டு நாள்களாகப் புனித யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் வானிலை சரியானதையடுத்து புனித யாத்திரை நேற்று தொடங்கியிருந்த நிலையில், அமர்நாத் குகை அருகே மாலை 5:30 மணியளவில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பக்தர்கள் முகாம்கள் பல அடித்துச்சென்றுவிட்டது. இதில், எதிர்பாராதவிதமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்திய ராணுவத்தின் மீட்புக்குழுவால் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது.
இதுகுறித்து இந்திய ராணுவம், `இதுவரையில் ஆறு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது, மேலும் சம்பவ இடத்துக்கு, கூடுதலாக இரண்டு மருத்துவக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பட்டான் மற்றும் ஷரிபாபாத் ஆகிய இடங்களிலிருந்து இரண்டு தேடுதல் மற்றும் மீட்பு நாய்ப் படைகள் விமானம் மூலம் பஞ்சதர்னி மற்றும் புனித குகைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.