டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி என்ற வேளாண் பல்கலைகழகம் சார்பில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய கட்கரி, இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்துவிடும் என்றும், இதனால் நாட்டில் எரிபொருட்களுக்கு தடைவிதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மஹாராஷ்ட்ராவின் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுவதாகவும், இதனை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் சிஎன்ஜி மூலம் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓடும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பச்சை ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றில் இருந்து தயாரிக்கலாம் என்றும், இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம் என்றும் கட்கரி குறிப்பிட்டார். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி சுமை குறையும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.