புதுச்சேரி: இயற்கையிடம் இருந்து மனிதன் வெகுதூரம் வந்து விட்டதால்தான் நிறைய தவறு நடக்கிறது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆதங்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. அதோடு ஒவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
சிறை வளாகத்தில் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சிறைவாசிகள் புதிதாக ஏலக்காய் தோட்டம், காபி தோட்டம், மிளகு, கிராம்பு, டிராகன் ப்ரூட்ஸ் மற்றும் காய்கறிகள், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பண்ணையை உருவாக்கி உள்ளனர். இவற்றை வீடியோவில் பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (ஜூலை 9ம் தேதி) காலாப்பட்டு மத்திய சிறையை பார்வையிட வந்தார்.
அங்கு சிறைவாசிகள் உருவாக்கியிருந்த ஏலக்காய், காபி தோட்டத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, விவசாயம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட மற்ற பணிகளையும் பார்வையிட்டு வியந்த உயர்நீதிமன்ற நீதிபதி, கைதிகளை வெகுவாக பாராட்டினார். மேலும் அங்கிருந்த கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் விவசாயம் செய்வதாக கடந்த வாரம் ஒரு வீடியோவை பார்த்தேன். உடனே இதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து மனைவி, மகனுடன் இங்கு வந்தேன்.
இந்த இடத்தை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு இங்கு உள்ளவர்களுடன் பேசிய பிறகு, நீங்கள் எங்கு சென்றுவிட்டு வந்தீர்கள் என்று வெளியில் இருப்பவர்கள் கேட்டால், ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு வந்தேன், அங்கு தன்னிலையை உயர்த்துவதற்கு முயற்சி செய்யும் சிலரிடம் பேசிவிட்டு வந்தேன் என்று சொல்லக்கூடிய அனுபவம் கிடைத்துள்ளது.
இங்கு 68 வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இயற்கையோடு உள்ள சிறைவாசிகள் இதை தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தால், அவர்கள் தங்களுக்கான ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும், தனிமையிலும், எந்த வேலையும் இல்லாமல், தன்னை தானே குழப்பி கொள்ளும் சூழலில் இருந்து வெளியே வரலாம்.
இயற்கையின் அருகில் மனிதன் இருக்கும் வரை பெரியதாக தவறுகள் நடக்காது. இயற்கையிடம் இருந்து மனிதன் வெகுதூரம் வந்து விட்டதால்தான் நிறைய தவறு செய்கிறோம். இங்குள்ள அதிகாரிகள் கைதிகளை திரும்பி இயற்கையிடம் அழைத்து செல்கிறார்கள். மனிதன் இயற்கையிடம் செல்ல செல்ல தவறும் குறைந்து கொண்டே செல்லும். கைதிகள் எல்லோரும் திருந்தி, அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும். இங்கு நடைபெறுவது எல்லோருக்கும் தெரிய வேண்டும். மற்ற சிறைகளிலும் இதுபோல் ஒரு சிறிய இடம் கிடைத்தாலும், அங்கு கைதிகள் விவசாயம் செய்து கொண்டு இருந்தால் கைதிகளை திருத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
இதன் மூலம் சிறைச்சாலை என்ற சூழலே மாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு சூழலில் குற்றம் செய்துவிட்டு தண்டனை அனுபவிப்பவர்களை இந்த சமுதாயம் தள்ளி வைக்கக் கூடாது. இந்த சமுதாயத்தோடு அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான சூழலை சிறைச்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். அந்த சூழலை இந்த சிறைச்சாலை பெரியதாக ஏற்படுத்துகிறது.’’ என்று தெரிவித்தார்.