கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர். அவர்கள் கைகளில் இலங்கை தேசியக் கொடி இருந்தது.
இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று நடத்திய பிரம்மாண்ட பேரணிக்குப் பின்னர் அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தினர். இன்னொரு குழுவினர் மாளிகைக்குள் இருந்த சமையலறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சமைக்கத் தொடங்கினர்.
இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அதிபர் மாளிகையின் சமையலறை நிறைய உணவுப் பொருட்கள் நிறைவாக இருந்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் நீந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Amid economic turmoil, protestors storm Sri Lankan President residence; local media video show they wr even swimming in the Presidential swimming pool. pic.twitter.com/ERp7pIDklR
முன்னதாக, இன்றைய போராட்டம் மிகப் பெரியதாக வெடிக்கக் கூடும் என்று முன்கூட்டியே உளவுத் துறை எச்சரித்ததால் அதிபர் கோத்தபய நேற்றிரவே ராணுவ தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இத்தகையச் சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.