இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக இலங்கையில் சாமானிய மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்
பொருளாதார சரிவு காரணமாக பெருகி வரும் வேலையின்மை மற்றும் இனவெறியுடன் கூடிய மதவெறி காரணமாக அரசுக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர்.
இதன் உச்சகட்டமாக மக்கள் புரட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தனது அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-வின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நெருக்கடிக்குப் பிறகு பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.
இருந்தபோதிலும் அவரது வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் இறங்கியதால் அவரது வீட்டுக்கு தீவைத்தனர்.
BREAKING 🚨- Sri Lankan PM’s house SET ON FIRE 🔥 #SriLanka pic.twitter.com/lAAehUhp7b
— Ihtisham Ul Haq (@iihtishamm) July 9, 2022
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை முதல் நடைபெற்று வரும் போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் கொழும்பு நோக்கி மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பணியாளர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அரசு இயந்திரம் செயலற்று போயுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் வீடு தீக்கிரையாக்கப்பட்டு போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.