உ.பி. மேலவையில் காங்கிரஸுக்கு ஒரு எம்எல்சி கூட இல்லாத நிலை: 2 பேர் மட்டுமே எம்எல்ஏக்கள்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மேலவையில் முக்கிய எதிர்கட்சிகளான காங்கிரஸ், பிஎஸ்பிக்கு ஒரு எம்எல்சியும் இல்லாத நிலை ஏற்பட உள்ளது. இதில் காங்கிரஸுக்கு 37 வருடங்களுக்கு முன் 269 என்றிருந்த எம்எல்ஏக்கள் வெறும் 2 எனக் குறைந்துள்ளன.

உ.பி.யின் மேலவையில் பத்து எம்எல்சிக்கள் பதவிக் காலம் வரும் புதன்கிழமையுடன் முடிவடைய உள்ளன. இவற்றில் பாஜக 2, அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி 5, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு(பிஎஸ்பி) 3 மற்றும் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். இவர்களில் பாஜகவின் 2 மற்றும் சமாஜ்வாதியின் 5 எம்எல்சிக்கள் மீண்டும் தேர்வாக உள்ளனர். பாஜகவின் இருவரில் துணை முதல்வர் கேசவ் பிரஷாத் மவுரியாவும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சவுத்ரி பூபேந்திராசிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், காங்கிரஸின் ஒரு உறுப்பினர் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உள்ளது. இதனால், கடந்த 137 வருடங்களில் உபி மேலவையில் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினரும் இல்லாத நிலைமை உருவாகி விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1897-இல் உ.பி மேலவை துவக்கப்பட்டது. இதேபோல், பிஎஸ்பியின் 3-இல் ஒருவர் மட்டுமே மீண்டும் தேர்வாகும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், உ.பி.யில் ஐந்து முறை ஆட்சி புரிந்த பிஎஸ்பிக்கு அதன் மேலவையில் ஒரே ஒரு உறுப்பினர் உள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் கடைசியாக 1985-இல் காங்கிரஸ் ஆட்சி புரிந்தது. இதன் மீது போபார்ஸ் ஊழல் புகாரை வி.பி.சிங் எழுப்பியதை அடுத்து காங்கிரஸின் சரிவு உபியில் துவங்கியது.

காங்கிரஸுக்கு சுமார் 37 வருடங்களாக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் நிலை துவங்கியது. 1985 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு உ.பி சட்டப்பேரவையில் 269 எம்எல்ஏக்கள் இருந்தனர். இது படிப்படியாகக் குறைந்து, கடந்த மார்ச்சில் நடைபெற்ற உ.பி சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளனர்.

தனது பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா தலைமையில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பதாகக் கூறிய காங்கிரஸுக்கு வெறும் 2.5 சதவிகித வாக்குகள் கிடைத்தன.

உ.பி. மேலவையில் எதிர்கட்சியான சமாஜ்வாதிக்கு இருந்த 50 எம்எல்சிக்கள் சமீபத்தில் முடிந்த தேர்தலில் 17 எனக் குறைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜூலை 6 முதல் மேலும் குறைந்து சமாஜ்வாதி மேல்சபையில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேல்சபையில் எதிர்கட்சிக்கு குறைந்தது 10 எம்எல்சிக்கள் இருப்பது அவசியம். உ.பி.யில் ஆளும் பாஜக அதன் இரண்டு சபைகளிலும் வலுவடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.