திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ராக்கெட்ரி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் களம் கண்டிருக்கிறார் நடிகர் மாதவன். அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றியிருக்கும் நடிகை வைஷ்ணவி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சினிமாவில் தனது ரீ-என்ட்ரியைத் தொடங்கியிருக்கிறார். தனது முதல் இன்னிங்ஸ் அனுபவம் முதல், கம்பேக் மகிழ்ச்சி வரை பகிர்ந்தார் வைஷ்ணவி.
“என் பாட்டியும் நடிகையுமான செளகார் ஜானகிக்கு மூணு பிள்ளைகள். எங்கம்மா யக்ஞபிரபாதான் மூத்தவங்க. ஸ்கூல் படிக்கும்போது, பாட்டியின் பிறந்தநாள்ல நான் அவங்களுக்கு கேக் ஊட்டிவிடுற போட்டோ பத்திரிகைகள்ல வெளியாச்சு. அதைப் பாத்துட்டு, ‘தலைவனுக்கோர் தலைவி’ங்கிற படத்துல என்னை நடிக்கக் கேட்டாங்க. அப்போ ஆக்டிங்ல எனக்கு விருப்பமே இல்லை.
‘தேடி வர்ற வாய்ப்பை ஏன் நிராகரிக்கணும்?’னு குடும்பத்தினர் சொல்ல, சம்பிரதாயத்துக்காக இந்த ஒரு படத்துல மட்டும் நடிக்கலாம்னு சம்மதிச்சேன். ஆனா, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் நிறைய வந்து, யோசிக்க நேரமில்லாம தொடர்ந்து நடிக்க வேண்டியதா போச்சு. ஸ்கூல் முடிச்ச கையோடு சினிமாவுக்கு வந்ததால, அப்புறமா டிகிரி படிக்கவும் வாய்ப்பு அமையலை. ஒருசில எதிர்மறை அனுபவங்களுக்குப் பிறகு, ஹோம்லி ரோல்கள்ல மட்டுமே நடிக்கிறதுனு முடிவெடுத்தேன். அதனால, தங்கச்சி மாதிரியான கேரக்டர் ரோல்தான் எனக்கு அதிகமா வந்துச்சு.
அந்த ‘அழுகாச்சி’ கேரக்டர் நடிப்பையெல்லாம் இப்போ பார்க்கிறப்போ சிரிப்பா இருக்கும். நான் நடிச்ச படங்களைப் பார்த்துட்டு, ‘நீயேம்மா இப்படியெல்லாம் நடிச்சே’ன்னு என் பொண்ணுங்க கிண்டலா சிரிப்பாங்க. அந்த நேரத்துல காமெடி, வில்லி, போல்டான ரோல்கள்ல நடிக்க ஆசைப்பட்டேன். கே.பாலசந்தர் சார் இயக்கத்துல ‘ஒரு வீடு இரு வாசல்’ படம் உட்பட ஒருசில வாய்ப்புகளே, என் எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி அமைஞ்சது” என்பவர், 1990-களில் சினிமா தவிர, சின்னத்திரை, மேடை நாடகங்களிலும் அதிக அளவில் நடித்தார்.
குடும்ப நண்பரான நடிகர் மாதவனுக்காக, தனது வைராக்கியத்தை உடைத்து, ‘ராக்கெட்ரி’யில் பணியாற்றியிருக்கிறார் வைஷ்ணவி.
“மாதவன் சார் ‘ராக்கெட்ரி’யில வேலை செய்ய எனக்கு அழைப்பு விடுத்தப்போ, அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் போயிட்டிருந்துச்சு. அந்தப் பட வேலைகள் பத்தி என் கணவர் அரவிந்த் கமலநாதன் பலமுறை என்கிட்ட விவாதிச்சிருந்தார். அதன்படி, ‘ராக்கெட்ரி’யில எனக்கு ஆஃப் ஸ்கிரீன் வேலைதான் இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். மறுபடியும் ஆக்டிங் வேண்டாமேன்னு உறுதியா இருந்த நான், மாதவன் சாருக்காக ‘லாங்வேஜ் கோ- ஆர்டினேட்டர்’ வேலைக்கு ஒத்துகிட்டேன்.
சினிமாவில் இருந்து விலகினதுக்கு அப்புறமா, கடந்த 25 வருஷங்கள்ல குறிப்பிட்டுச் சொல்லுற வகையில சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்ல நான் கலந்துக்கல. அதனால, கொஞ்சம் மாறுபட்ட உணர்வுலதான் மும்பை போனேன். என்னை நார்மல் மோடுக்குக் கொண்டு வந்த பிறகுதான், வேலைகளைச் செய்ய வெச்சார் மாதவன் சார். இந்தப் படத்தோட பெரிய பலமே ஸ்கிரிப்ட்தான். அதைப் பக்காவா கையாண்ட மாதவன் சார், ‘ராக்கெட்ரி’க்காக ஆறு வருஷங்களா ரொம்பவே மெனக்கெட்டிருக்கார்.
தினமும், நாங்க செய்ய வேண்டிய வேலைகள் பத்தின தகவலை மெயில் வழியே முன்கூட்டியே அனுப்பிடுவாங்க. மும்பையில மாதவன் சார் ஆபீஸ்லதான் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துச்சு. என் கணவரும் நானும் ஆபீஸ் போற மாதிரியே ஒண்ணா வேலைக்குப் போயிட்டு, ஒருத்தருக்காக இன்னொருத்தர் காத்திருந்து திரும்பி வந்தோம். லாங்வேஜ் சிக்கல் ஏற்படாத வகையில படத்துக்கான நடிகர்கள் தேர்வுலயும் மாதவன் சார் கூடுதல் கவனம் கொடுத்திருந்தார். அதுல, இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திரா சார், மோகன்ராம் சார் உட்பட சில நடிகர்களை நான் சிபாரிசு செஞ்சேன்” என்று, ‘ராக்கெட்ரி’யில் ஐக்கியமானதைச் சொன்ன வைஷ்ணவி, ‘ராக்கெட்ரி’யில் நடிகை சிம்ரனுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
“2020-ல் கொரோனா சிக்கல் ஆரம்பிக்கும் முன்பே ஷூட்டிங் வேலைகளையெல்லாம் முடிச்சுட்டோம். பிறகு, லாக்டெளன் தளர்வுகளைப் பொறுத்து டப்பிங் வேலைகளை நடத்தினோம். வெவ்வேறு நகரங்கள்ல நடந்த டப்பிங் வேலைகள்ல, மாதவன் சாரும் கூடவே இருந்தார். அவரின் முடிவுபடியே, சிம்ரனுக்கு நான் குரல் கொடுத்தேன். ‘நீ பாதி நான் பாதி’ படத்துல கெளதமிக்கும், ‘திருடா திருடா’ல அனு அகர்வாலுக்கும், ஒரு படத்துல விஜயசாந்திக்கும் டப்பிங் கொடுத்திருக்கேன். அதுக்கப்புறமா பெரிய இடைவெளிக்குப் பிறகு, டப்பிங்லயும் ரீ-என்ட்ரி கொடுத்த அனுபவம் எனக்குக் கிடைச்சது.
படத்துல நடிச்சவங்கள்ல குரல் கொடுக்க வாய்ப்பில்லாதவங்களுக்கு, பிற டப்பிங் கலைஞர்களைப் பயன்படுத்துற விஷயத்துல, முழு சுதந்திரத்தை மாதவன் சார் எனக்குக் கொடுத்தார்.
அப்துல்கலாம் சாரின் குரல் வித்தியாசமானது. அவருக்குப் பொருத்தமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தேர்வு செய்யுறதுதான் சவாலா இருந்துச்சு. ரகுவரன்ங்கிற டப்பிங் ஆர்ட்டிஸ்ட், அப்துல்கலாம் சாரின் ரோலுக்குச் சிறப்பா குரல் கொடுத்திருந்தார். ஆக மொத்தம், இத்தனை வருஷங்களுக்குப் பிறகு, ‘ராக்கெட்ரி’ மூலமா கிடைச்ச சந்தோஷம், இனி அடுத்தடுத்து சினிமாவுல வேலை செய்யுற உற்சாகத்தைக் கொடுத்திருக்கு” என்று கலகலப்புடன் முடித்தார்.
அவள் விகடனில் வெளியான நடிகை வைஷ்ணவின் விரிவான பேட்டியைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.