ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை ‘காளி’ என்ற ஆவணப்பட படத்தின் போஸ்டரை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில், காளி தேவி சிகரெட் புகைப்பதுடன், கையில் ஓரினச்சேர்கையாளர்களின் கொடியை பிடித்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகமத்திய பிரதேச காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. லீனா மணிமேகலை தன்னை விமர்சிப்பவர்களுக்கு தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்.
லீனா மணிமேகலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “என் காளி வினோதமானவள். அவள் சுதந்திரமான ஆன்மா. அவள் ஆணாதிக்கத்தை கடுமையாக எதிர்க்கிறாள். அவள் இந்துத்துவாவை தகர்க்கிறாள். அவள் முதலாளித்துவத்தை அழிக்கிறாள். அனைவரையும் தன் ஆயிரம் கரங்களால் அரவணைக்கிறாள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலை தெரிவித்திருந்தார்.