சாதாரணமாக யாராவது உடம்பை பிடித்து விட்டால் நமக்கு ஒரு இதமாக இருக்கும். சில நேரங்களில் வலி இருக்கிற பகுதியில் யாராவது தடவி விட்டாலோ அழுத்தி பிடித்தாலோ வலி போனது போல ஒரு எண்ணம் இருக்கும். வலி போக குழந்தைகளை மிதிக்க சொல்வது கூட உண்டு. முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கிற பழக்கம் இருந்தது. இப்போது நாகரீக உலகம் என்கிற பெயரில் அவை நம்மை விட்டு பிரிந்து போய்விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பழமையானவர்கள் இல்லங்களில் மட்டுமே இன்றைக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்கிற பழக்கம் இருந்து வருகிறது. அது கூட ஆண்கள் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கிற பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் முற்றிலுமாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை விட்டு விலகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது உடலை பிடித்து விடுவது வழக்கம். அப்போது உடல் வலி எல்லாம் தீர்ந்தது போல இருக்கும். அதுவே தொழிலாக செய்கிற ஒருவர் உடலில் எண்ணெய் தேய்த்து உடல் பாகங்களை பிடித்து விடுகிறபோது நமக்கு இன்னமும் சுகமாய் இருக்கும். உடல் வலியும் குறைந்து போகும். பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் இப்படி மசாஜ் செய்கிறவர்கள் இருப்பதில்லை. சுற்றுலா தலங்களில் அதுவும் நீர்வீழ்ச்சிகள் இருக்கிற பகுதிகளில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அதுதான் தொழில். அதில் வருகிற வருமானம் தான் குடும்ப நடத்துவதற்கு பொருளாதாரத்தை ஈடு செய்யும். அப்படிப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
“என் பேரு மாரியப்பன். எனக்கு வயசு 39 ஆவுதுங்க. மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கனது இல்லன்னு சொல்லுவாங்கல்ல., அதுல நானும் ஒரு ஆளு. சொந்த ஊரு ஒகேனக்கல் தாங்க. கல்யாணம் ஆயிடுச்சு! ஒரு பொண்ணு, ஒரு பையன். எங்க அப்பாவும் இதே ஊர் தான் அவரும் என்னைப் போல எண்ணெய் தடவி மசாஜ் பண்ணுற ஆள் தான். என்ன ஒன்னு கூடுதலா மீன் வியாபாரமும் பண்ணுவாரு. அதுல வர வருமானத்தை வைத்து தான் எங்கள வளத்தாங்க. நான் கிட்டத்தட்ட 25 வருஷமா இந்த வேலை செஞ்சுகிட்டு வர்றேன்.
நான் முதல் முதலில் வேலைக்கு வரும்போது ஒரு மசாஜ்க்கு 50 ரூபாய் கொடுப்பாங்க. அப்போ ஒரு கிலோ அரிசி அஞ்சு ரூபாய்க்கு வித்துச்சு. அப்பல்லாம் எல்லாரும் மசாஜ் பண்ண மாட்டாங்க. ஓரளவுக்கு வசதியானவங்க தான் மசாஜ் பண்ணுவாங்க. மத்தவங்க அவங்களா எண்ணெய் வாங்கிட்டு வந்து உடம்புல தேச்சிக்கிட்டு அருவியில குளிச்சிட்டு போயிடுவாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலைவாசி உயர இப்ப ஒரு மசாஜ் 200 ரூபா 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் அப்படின்னு மூணு வகையா இருக்கு. எண்ணெய் மசாஜ் மட்டும் இல்லைங்க பவுடர் மசாஜும் உண்டு.
வருஷத்துல ஏப்ரல, மே, ஜூன் இதுதாங்க சீசன் மாசம். அதுவும் இல்லாம பள்ளிக்கூடம் காலேஜ் எல்லாம் லீவ்ல இருக்கிற மாசம். இந்த மாசத்துல தினமும் வேலை இருக்கும். மத்த மாசத்துல சனி, ஞாயிறு தாங்க ஓரளவுக்கு வருவாங்க. இப்படி சீசன் இருக்கிற நாள்ல ஒரு நாளைக்கு பத்து பேர் வரைக்கும் மசாஜ் பண்ணுவோம். அதுக்கு மேலயும் பண்ணலாம். ஆனா எங்களுக்கும் உடம்பு வலிக்குங்க. ஒவ்வொருத்தருக்கும் மசாஜ் பண்றதுக்கு குறைந்தது அரை மணி நேரம் எடுக்கும். அதுல அவங்களா பார்த்து கொடுக்கிற காசுதாங்க. இந்த 200, 500, 1000 ரேட்டுக்குத் தகுந்த மாதிரி நிறைய வெரைட்டி மசாஜ் இருக்குங்க. பெரும்பாலும் 200 ரூபாய் மசாஜ் தாங்க எல்லோரும் பண்ணிக்குவாங்க.
மசாஜ் பெரும்பாலும் நல்லெண்ணெய்., அத விட்டா பொன்னாங்கண்ணி எண்ணெய்., இரண்டும் உடம்புக்கு ரொம்ப குளிர்ச்சீங்க. ஒரு நபருக்கு மசாஜ் பண்றதுக்கு நல்லெண்ணையா இருந்தா 100 மில்லி தேவைப்படும். அப்ப நா வந்த புதுசுல ரெண்டு ரூபா 3 வரைக்கும் வித்துச்சு எண்ணெய். இப்ப 100 மில்லி 40 ரூபா. அதுவும் பொன்னாங்கண்ணி தைலமா இருந்தா ஒரு ஆளுக்கு 150 ரூபா ஆகும். காலையில ஆறு மணிக்கு இங்கே வந்தேன்னா சாயந்திரம் 6 மணி வரைக்கும் மசாஜ் பண்ணுவோம்.
மசாஜ் பண்றது சாதாரண வேலை இல்லைங்க ஒவ்வொரு வயசுக்கும் ஒவ்வொரு விதமா உடம்பு இருக்கும். அத ஏதோ பார்த்துதான் பிடித்து விடனும். நீண்ட நாள் நோய் உள்ளவர்களுக்கு நாங்க பெரும்பாலும் மசாஜ் பண்றது கிடையாது. அதேபோல நுரையீரல், இதயம் பாதிக்கப்பட்ட அவங்களுக்கும் மசாஜ் பண்றது கிடையாது. 20 வயசுல இருந்து 40 வயசு வரைக்கும் தான் அதிக பேர் மசாஜ் பண்ண வருவாங்க. இதுல வர வருமானத்தை வச்சிட்டு தாங்க குடும்பத்தை நடத்துறேன். பசங்க 2 பேரும் படிக்கிறாங்க. அவங்க இந்த வேலைக்கு வந்துராம பாத்துக்கணும். என்ன நாங்க பட்ட கஷ்டம் எங்களுடைய போகட்டும் அப்படின்னு நினைக்கிறோம்.
இங்க மட்டும் லைசன்ஸோட உள்ளவங்க 320 பேர் மசாஜ் பண்றோம். நடுவுல நடுவுல அரசாங்கம் பரிசல் ஓட்ட, மசாஜ் பண்ண அதுக்கு இதுக்குன்னு ஏதாவது ஒரு தடை போட்டுருவாங்க. அந்த மாதிரி காலகட்டத்தில் வீட்டில் சோத்துக்கு ரொம்ப கஷ்டமாயிடுங்க. எப்படியோ நம்ம மசாஜ் பண்ற ஆள் திடகார்த்தமா நல்லபடியா இருக்கணும்னு நினைச்சுக்கிறது. ஏன்னா அப்பதான் அடுத்த சீசனுக்கு வரும்போது நம்மகிட்ட வருவாங்க.
ஆண் பிள்ளைகளுக்கு நாங்க மசாஜ் பண்றது போலயே பெண்களும் இங்க நிறையபேர் மசாஜ் பண்ணிக்குவாங்க. அதுக்கு பெண்கள் ஆளுங்க இருக்காங்க. அதுவும் இதேபோல விலை தான் அவங்களுக்கும். அரசாங்கம் மசாஜ் பண்றதுக்கு தனியா ரூம்ஸ் கட்டிவிட்டு இருக்காங்க.
எதிர்காலத்தில் பிள்ளைங்க படிச்சிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு போயிட்டாங்களா சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிறேன். என் புள்ளைங்க இந்த வேலைக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிற ஆளுங்கல்ல நானும் ஒருத்தன்” என்று கூறிவிட்டு அடுத்தவருக்கு எண்ணெய் தேய்க்க தயாராகிக் கொண்டிருந்தார்.
எல்லா மனிதர்களுக்கும் பின்னாலும் ஒரு உழைப்பு இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் அந்த உழைப்பு கூட சுரண்டப்படுவதை அவர்களே அறிய முடியாத நிலை உள்ளது. இப்படி எளிய மனிதர்களின் வாழ்க்கை உழைப்பு மட்டுமே நம்பி இருப்பதை நம்மால் காண முடிகிறது. தொடர்ந்து அடுத்து ஒரு எளிய மனிதருடன் பயணிப்போம்.
முந்தைய அத்தியாயத்தை படிக்க… எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
– ஜோதி நரசிம்மன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM