கருங்கல் அருகே திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சிலர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கருங்கல் ஆயினிவிளை பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தற்போது கருங்கல் அடுத்த பாலவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் வீட்டில் உள்ள பெண்களையே வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்கமாக போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்கு தெரு வரன்களை கொடுக்கும் ஆசாமிகள் அச்சப்படும் அளவுக்கு ஒட்டியுள்ளனர்
அதில், ‘திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு’ தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்.
குறிப்பு- சில நபர்களின் அடையாளம் தெரியும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வில்லங்க போஸ்டர் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், கருங்கல் போலீசார் இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி போஸ்டர் அடித்த இளைஞர்களும் புறம் பேசி வரன்களை கெடுக்கும் ஆசாமிகளும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி விடுவோமோ என அச்சமடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM