சென்னை: காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் மாவட்டங்களில் கருத்தரங்கு நடை பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
ஜனவரி 15ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு காமராஜரின் பிறந்தநாளை தமிழகஅரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது. நடப்பாண்டு காமராஜரின் 120 பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் வரும் 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் கருத்தரங்கு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வராக காமராஜர் பொறுப்பு வகித்த ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில்தான் கல்விப் புரட்சி ஏற்பட்டது.
மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறை, பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அவரது ஆட்சிக் காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டன.
அதனால்தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை, தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து, பாராட்டுகிறார்கள். அவரது ஆட்சியில்தான் தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பாதையில் சென்றது. கிராமப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எனவே, காமராஜரின் 120-வது பிறந்த நாளில், அனைத்து மாவட்ட காங்கிரஸார் வரும் 15-ம் தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதேபோல, எம்.பி. எம்எல்ஏ-க்கள் தங்களது தொகுதிகளில் கருத்தரங்கு நடத்த உள்ளனர்.
டந்த 50ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் அந்தக் கருத்தரங்கம் அமைய உள்ளது.
மேலும், காமராஜர் பிறந்த நாளில் ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட்டு, இன்றைய காங்கிரஸின் அடையாளமாகத் திகழ்பவர் காமராஜர். எனவே, அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பெருமளவு பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.