புதுடெல்லி: நாட்டின் புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பொதுவேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் காட்டிய அவசரம் தற்போது கூடாது என முடிவு செய்துள்ளன. இந்த அவசரம் காரணமாக எதிர்க்கட்சிகளில் சில, ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளித்துவிட்டன. இதனால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வியுறும் நிலை உள்ளது.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி தனது வேட்பாளரை அறிவிக்கும் வரை காத்திருப்பது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் 2 நாட்களுக்கு முன் கூடி ஆலோசனை செய்தனர். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க புதிய வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “ஆளும் கட்சி அறிவிப்புக்கு பின் அதனை சமாளிக்கும் வகையில் நாங்கள் பொது வேட்பாளரை அறிவிப்போம். சின்ஹா விவகாரத்தில் நடைபெற்ற தவறால் எதிர்க்கட்சிகள் சிதறின. இந்தமுறை அந்த தவறை செய்யாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதையாமலும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான எச்சரிக்கையாகவும் வியூகம் அமைப்போம்” என்று தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பகுஜன் சமாஜ், மதசார்பற்ற ஜனதா தளம், அகாலி தளம் ஆகியவை குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதிக்கு ஆதரவளித்தன.
இந்த தவறு மீண்டும் நிகழாமல் அமைக்கப்பட்டு வரும் வியூகத்திற்கு ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிகிறது. இவ்விரு கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளபோதிலும் தனிஆவர்த்தனம் போடும் கட்சிகளாகும்.
சோனியா விருப்பம்
முக்கிய எதிர்க்கட்சியாகக் கருதப்படும் காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி, தம் கட்சியிலிருந்து ஒருவரை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக்க விரும்புகிறார். இதற்கு அக்கட்சியின் தலித் சமூகத்தை சேர்ந்த மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பேசப்படுகிறார். எனினும் கார்கேவை காங்கிரஸ் பரிந்துரைக்குமே தவிர கட்டாயப்படுத்தாது என கூறப்படுகிறது.
இதனிடையே, வரும் 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒரு புதிய அறிவிப்பை குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவைக்கு சமீபத்தில் தேர்வான பலர் இன்னும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் பதவியேற்காத உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார். “நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும், அதன் நிலைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்க மட்டுமே பதவியேற்பு கட்டாயம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வான 57 உறுப்பினர்களில் 27 பேர் மட்டுமே நேற்று பதவியேற்றனர். இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.