'குலசேகரபட்டினத்தில் நவீன வசதிகளுடன் ராக்கெட் ஏவுதளம்' – மயில்சாமி அண்ணாதுரை

உலக அளவில் நவீன வசதிகளுடன் குலசேகர பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
கலைஞர் கணினி கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் 12 ஆம் வகுப்பில் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்ற சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு 2000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்று சான்றிதழ் மற்றும் உதவித் தொகையை வழங்கினர்.
image
இந்த நிகழ்ச்சி அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசும்போது… சைதாப்பேட்டை தொகுதியில் 102 தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு கிடைத்து கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழலில் மாணவர்கள் யாரேனும் இருந்தால் கலைஞர் கணினி கல்வியகத்திடம் தகவல் தெரிவிக்கலாம். அவர்களுக்கான கல்வி கட்டணம் செலவை ஏற்று மாணவர்கள் கல்வி தொடர உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ்… அறிவில் வளர்ச்சிக்கு மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு பங்கு வகித்திருக்கிறார். கல்விக்கான சமூக பணியை அனைவரும் தொடர வேண்டும் என்றார்.
இதையடுத்து விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும் போது… இந்தியாவில் அறிவியலை காண்பிக்க ஒரே காரணம் கல்விதான். கல்வி என்பது இப்போது பல பரிணாமம் அடைந்து வருகிறது. எழுத படிக்கத் தெரிந்தால் கல்வி என்று முன்னர் இருந்தது ஆனால், இப்போது கணினி கல்வி எல்லா துறையிலும் முக்கிய தேவையாக இருக்கிறது.
image
உலகத்தரமான ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகப்பட்டிணத்தில் வர இருக்கிறது. கணினி, அறிவியல் படித்த இளைஞர்களுக்கு இதன் மூலம் அதிக வேலை வாய்ப்பு வரும். நம் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
செவ்வாய் கிரகத்தை அடைய அமெரிக்கா, ரஷ்யா பல முறை முயற்சித்து தான் ஜெயிச்சது. சைனா, ஜப்பானால் ஜெயிக்க முடியல, ஆனால், இந்தியா முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தோம். அதற்கு காரணம் நமது அறிவியல் மற்றும் கிரக அமைப்புகளின் முயற்சியே,
இப்போது கல்வி திறன் மேம்பாடு நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்களாக இல்லாமல் சாதிப்பவர்களாக நம் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.