தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், வாரிசு நடிகருமான ராம்சரணின் மனைவி உபாசனா காமினேனி கொண்டேலா குழந்தை பெற்று கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்ததற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். எனினும் இந்த விஷயம் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரின் மகனான ராம் சரண், ‘சிறுத்த’ என்ற தெலுங்கு படம் வாயிலாக கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பெற்றார். ஏனெனில், தெலுங்கில் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தப் படம் ‘மகதீரா’. அதன்பிறகு ஏற்றம் இறக்கங்களுடன் இவரது திரை வாழ்க்கை சென்றாலும், மீண்டும் ராஜமௌலியின் இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து வெற்றிபெற்றதால் பான் இந்தியா நடிகரானார் ராம் சரண்.
அதேநேரத்தில் இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா காமினேனி கொண்டேலா என்ற பெண்ணுடன், பிரபலங்கள் வியக்கும் வகையில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. உபாசனா காமினேனி தொழில்முனைவோராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை. எனினும், தெலுங்கு திரையுலகில் கொண்டாடப்படும் தம்பதிகளில் இவர்களும் ஒருவர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், 17-வது அமெரிக்க தெலுங்கு அசோஷியேசன் ( ATA – American Telugu Association) சார்பில் நடைபெற்ற விழாவில், ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் உபாசனா காமினேனி கலந்துரையாடியனார். அப்போது அவர் பல கேள்விகளை ஜக்கி வாசுதேவிடம் கேட்டநிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்வி ஒன்றையும் அவர் கேட்டார். இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ‘எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. மக்கள் தொகை கட்டுப்பாட்டை மனதில் வைத்தே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது 10 வருட திருமண வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கையையும், எனது குடும்பத்தாரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் எனது ‘ஆர்ஆர்ஆர் RRR’ பற்றி கேட்பதையே மக்கள் கடமையாக வைத்திருக்கிறார்கள். அதாவது எனது உறவுகள் (Relationship), எனது இனப்பெருக்கத் திறன் (Reproduce), எனது வாழ்க்கையில் உள்ள பங்கு (Role) ஆகியனவற்றை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். என்னைப் போன்ற நிறைய பெண்களுக்கு இதற்கான விடை தெரிய வேண்டும்” இவ்வாறு அவர் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜக்கி வாசுதேவ், “நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளபோவது இல்லையென்றால், நான் உங்களுக்கு ஒரு விருது கொடுக்கப் போகிறேன். ஆரோக்கியமான மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடிய திறன் இருந்தும், குழந்தை பெற்றுக்கொள்ளாத அனைத்து இளம் பெண்களுக்கும் நான் ஏற்கனவே ஒரு விருதை அறிவித்துள்ளேன். இப்போது நீங்கள் பூமிக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை இதுதான். மனித இனம் ஒன்றும் அழிவின் விளிம்பில் இல்லை.
அடுத்த 30-35 ஆண்டுகளில் மக்கள் தொகை 10 பில்லியனை நோக்கிச் சென்றுவிடும். தற்போது மனிதன் புவி வெப்பமயமாதலை பற்றி கவலைப்படுகிறான். ஆனால் மனித இனம் குறைந்தால், புவி வெப்பமடைவதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எனவே, குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்களை பாராட்டி, வரவேற்க வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த உபாசனா காமினேனி, “என் தாயாரிடமும், மாமியாரிடம் விரைவில் இதுதொடர்பாக உங்களை பேச வைப்பேன்” என்று பதிலளித்தார்.
நடிகர் ராம் சரண் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, “சிரஞ்சீவி என்ற மெகா ஸ்டாரின் வாரிசாக திரை ரசிகர்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் எனது இலக்கிலிருந்து விலக வேண்டியிருக்கும். உபாசனாவுக்கும் சில இலக்குகள் இருக்கின்றன. ஆகையால் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை” என்று கூறியிருந்தார். இந்தநிலையில் அதனை உறுதிப்படுத்தும்விதமாக உபாசனா கூறியிருப்பது அவரது ரசிகர்களை சற்று ஏமாற்றமடைய செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM