திருவனந்தபுரம்: போலீஸ் தலைமையக ஏடிஜிபியாக இருந்த மனோஜ் ஆபிரகாம் விஜிலென்ஸ் ஏடிஜிபி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபியாக இருந்த கே. பத்மகுமார் புதிய தலைமையாக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக எம்.ஆர். அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி யோகேஷ் குப்தா கேரள மதுபான விற்பனைக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் பிரிவு ஐஜியான தும்மல விக்ரம் வடக்கு மண்டல ஐஜியாகவும், இந்தப் பதவியில் இருந்த அசோக் யாதவ் பாதுகாப்புப் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கேரள மதுபான விற்பனைக் கழக நிர்வாக இயக்குனராக இருந்த ஷியாம் சுந்தர் குற்றப்பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல சில மாவட்ட எஸ்பிக்களும் மாற்றப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திக் கோட்டயம் மாவட்டத்திற்கும், இடுக்கி மாவட்ட எஸ்பியாக இருந்த கருப்பசாமி கோழிக்கோடு எஸ்பியாகவும், வயநாடு மாவட்ட எஸ்பியாக இருந்த அரவிந்த் சுகுமார் 4வது பட்டாலியன் ஆயுதப்படை எஸ்பியாகவும், போலீஸ் தலைமையாக கூடுதல் ஐஜியாக இருந்த ஆனந்த் வயநாடு மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோட்டயம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக் சென்னையை சேர்ந்தவர் ஆவார். புதிய கோழிக்கோடு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள கருப்புசாமி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். வயநாடு மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்தும் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களையும் சேர்த்து மொத்தம் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.