கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையில் 50 சதவீதத்துக்கும் குறைவான பாட்டில்களே திரும்பப் பெறப்படுகின்றன.
கொடைக்கானலில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீசிவிட்டுச் செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், குப்பைகள் சேர்ந்து இயற்கை எழிலை கெடுப்பதை தவிர்க்கவும் நீதிமன்ற உத்தரவுப்படி காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறை அமலுக்கு வந்தது.
கொடைக்கானல் வட்டத்தில் இயங்கி வரும் 9 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆடலூரில் செயல்படும் ஒரு மதுபான கடை ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக ரூ.10 செலுத்தி பெற்றுக்கொண்டு, பின்னர் காலி பாட்டில்களை மதுபானக் கடைகளில் திரும்ப ஒப்படைத்து ரூ.10 பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நடைமுறை கடந்த ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வந்தது.
கொடைக்கானலில் உள்ள கடைகளில் சராசரியாக ஒரு கடையில் தினசரி 1,500 மது பாட்டில்கள் விற்பனையாகின்றன. 10 கடைகளிலும் சேர்ந்து ஒரு நாளைக்கு சுமார் 15 ஆயிரம் பாட்டில்கள் விற்பனையாகின்றன. மது பாட்டில்களில் கடை எண் ஒட்டப்பட்டு விற்கப்படுகிறது.
வாங்கிய கடைகளிலேயே காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மது பாட்டில்கள் வாங்குவோர் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே காலி பாட்டில்களை விட்டுவிட்டு வருவதும், இரவு நேரத்தில் சாலையோரங்களில் மதுகுடிப்போர் மறுநாள் காலை 11 மணி வரை வைத்திருந்து பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பதும் இயலாததாக உள்ளது.
இதனால் தினமும் 40 சதவீத பாட்டில்கள் மட்டுமே திரும்ப கடைக்கு கொண்டு வரப்பட்டு பாட்டிலுக்கு ரூ.10 திரும்பப் பெறப்படுகிறது. அதாவது நாளொன்றுக்கு விற்பனையாகும் 15 ஆயிரம் பாட்டில்களில் சுமார் 6 ஆயிரம் பாட்டில்கள் மட்டுமே திரும்ப கடைகளுக்கு வருகிறது.
மீதமுள்ளவற்றை வழக்கம்போல் ஆங்காங்கே விட்டுச் செல்வது தொடர்கிறது. இதனால் இந்த முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டம் அமல்படுத்தியவுடன் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது படிப்படியாக பாட்டில்களை திரும்ப கொண்டு வரும் முறை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விற்பனையாகும் அனைத்து பாட்டில்களும் திரும்பபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் கொடைக்கானலில் விற்பனையாகும் மது பாட்டில்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும், என்றார்.