கொழும்பு :இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளியேறிய அதிபர் கோத்தபய, வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியை துறக்கின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலக அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நம் அண்டை நாடான இலங்கையில் சுற்றுலாத் துறை பாதிப்பை சந்தித்தது. இதனால், இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டது.பெட்ரோல் – டீசல் வாங்க அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாததால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சிறிய தீவு நாடான இலங்கையின் சமூக, பொருளாதார நிலை சீர்குலைந்தது.
கலவரம்
பொறுத்துப் பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் போராட்டத்தில் குதித்தனர். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் தாக்கியதால், மிகப் பெரிய கலவரம் மூண்டது. இதில், அந்நாட்டு எம்.பி., உட்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரத்துக்கு காரணமான பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். விக்ரமசிங்கே தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கிடைத்துக் கொண்டிருந்த சிறிய அளவு பெட்ரோல் – டீசல் கூட முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் பொறுமை இழந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியில் இருந்து விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து திரண்டு வந்த மக்கள், கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை நேற்று முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.
முன்னெச்சரிக்கை
இதை தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து நேற்று முன்தினம் இரவே வெளியேறி, ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து, மேற்குஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் செல்ல உள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், உச்சபட்ச பாதுகாப்பு உள்ள கொழும்பு நகரின் கோட்டை பகுதியில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை நோக்கி, நேற்று காலை முதலே லட்சக்கணக்கானோர் ஊர்வலமாக வரத்துவங்கினர்.
கையில் இலங்கை தேசிய கொடியும், தலையில் ஹெல்மெட்டும் அணிந்து, அதிபரை ராஜினாமா செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது நடந்த கலவரத்தில் இரண்டு போலீசார் உட்பட, 30 பேர் காயம் அடைந்தனர். லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முன்னேறி வந்ததை கண்டு போலீசும், ராணுவமும் திகைத்து நின்றன.இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் இருந்தும், கொழும்பு நோக்கி போராட்டக்காரர்கள் வந்தனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்களை இயக்க ரயில்வே ஊழியர்களுடன் மக்கள் சண்டையிட்டனர். வாகனங்கள் கிடைக்காதவர்கள் நடைப்பயணமாக கொழும்பு நோக்கி வந்தனர்.இந்தப் போராட்டத்தில், மதத் தலைவர்கள், அரசியல் கட்சியினர், டாக்டர்கள், ஆசிரியர்கள், பொது உரிமை ஆர்வலர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தாமல், வன்முறையில் ஈடுபடாமல், கோஷங்களை எழுப்பியபடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பரபரப்பான இந்த சூழலில், அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூட்டினார். அப்போது அவரை பதவி விலகவும், அனைத்து கட்சியினரை உள்ளடக்கிய அரசு அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. முதலில் பதவி விலக மறுத்த ரணில் விக்ரமசிங்கே பின் வேறு வழியின்றி ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். புதிய அரசு அமையும் வரை பதவியில் தொடர்வதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, பொதுஜன பெரமுனா கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் பந்துல குணவர்தனே, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்து பல அமைச்சர்கள் பதவி விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. கொழும்பு நகரில் போராட்டத்துக்கான அறிவிப்பு வந்தவுடன் ஊரடங்கை திரும்ப பெறுமாறு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். திரும்ப பெறவில்லை எனில், போலீசார் மீது வழக்கு தொடுக்கவும் திட்டமிட்டனர். இதை தொடர்ந்து ஊரடங்கு நேற்று முன் தினம் விலக்கி கொள்ளப்பட்டது.
அதிபரின் சொகுசு மாளிகை: அனுபவித்த இலங்கை மக்கள்!
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த பொதுமக்கள் அதன் ஒவ்வொரு பகுதியாக சென்று வியப்புடன் சுற்றிப் பார்க்க துவங்கினர்.ஆடம்பர உணவுக் கூடம், பிரமாண்ட நீச்சல் குளம் ஆகியவற்றை கண்டு மிரண்டனர். சிலர் உடனடியாக, நீச்சல் குளத்தில் குதித்து ஆனந்த குளியல் போட்டனர். சிலர் பிரமாண்ட உணவு மேஜையில் இருந்தவற்றை எடுத்து உண்ண துவங்கினர். மற்றொரு குழு, சமையல் அறைக்குள் நுழைந்து சமையல் செய்ய துவங்கியது. குளியல் அறையில் உள்ள, ‘பாத் டப்’ உள்ளே படுத்தபடி குளிப்பது, படுக்கைகளில் படுத்து உருள்வது என, அதிபரின் ஆடம்பர வாழ்க்கையை மக்கள் நேற்று வியந்து பார்த்தனர்
கோத்தபய எங்கே?
அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்த நேரத்தில், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்த சொகுசு காரில் இருந்து இறங்கிய மூன்று பேர், மூன்று பெரிய பெட்டிகளை அவசர அவசரமாக கப்பலில் ஏற்றிய, ‘வீடியோ’ காட்சி, அந்நாட்டு ஊடகங்களில் வெளியானது. இதில் கோத்தபய குடும்பத்தினர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து துறைமுக அதிகாரி கூறியதாவது:கடற்படைக்கு சொந்தமான, எஸ்.எல்.என்.எஸ்., சிந்துரலா, எஸ்.எல்.என்.எஸ்., கஜபாஹு ஆகிய கப்பல்களில் இரு குழுவினர் ஏறியுள்ளனர். அவர்கள் யார், எந்த நாட்டுக்கு சென்றனர் என்ற தகவல்களை நான் வெளியிட கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.அதே நேரம், கொழும்பு துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் அருகே, வி.ஐ.பி.,க்கள் பயணிக்கும் கார் நின்று கொண்டிருக்கும், ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து கோத்தபய, விமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பிச் சென்றதாக, உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியானது.
பிரதமர் வீட்டுக்கு தீ
கொழும்பு நகரில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கு முன் திரண்டு ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று இரவு, அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பிரதமர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
சட்டம் கூறுவது என்ன?
இலங்கையில் அதிபராக பதவி வகிப்பவர் ராஜினாமா செய்தால் அல்லது அதிபர் பதவி காலியானால், பார்லிமென்ட் கூடி, அதன் உறுப்பினர்களில் ஒருவரை, புதிய அதிபராக தேர்வு செய்யலாம் என, அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.அதிபர் ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் பார்லிமென்ட் கூட வேண்டும். அதிபர் பதவி காலியாக இருப்பதாக, பார்லிமென்ட் செயலர், சபையில் அறிவிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால், ஓட்டுச் சீட்டு வாயிலாக தேர்தல் நடத்தி, உறுப்பினர்கள் புதிய அதிபரை தேர்வு செய்வர். பெரும்பான்மை ஓட்டுகளை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்படுவார். பார்லிமென்ட் கூடியதிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் நடந்து முடிய வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்