இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ‘ஹர் கர் திரங்கா’ எனும் பிரசாரம் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு தற்போது, இயந்திரத்தின் மூலம் செய்யப்பட்ட பாலியஸ்டர் துணியிலான கொடிக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. இத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன், காதியால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மேலும் பாலியஸ்டர் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படும் தேசிய கொடிகளுக்கும் ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார், மத்திய அரசின் இந்த திடீர் முடிவு குறித்து பா.ஜ.க-வை இன்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜோய் குமார். “பா.ஜ.க, நாட்டின் அரசு சொத்துக்களை விற்றுவருகிறது. நாட்டின் கருவூலம் குறைந்துகொண்டே வருவதால், இப்போது தேசியக் கொடியை விற்கும் நோக்கத்தில் அவர்கள் உள்ளனர். பாலியஸ்டர் எங்கிருந்து வரும், சீனா. லடாக்கில் 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனப் படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ள நிலையில், தற்போது சீனாவிலிருந்து இந்தியக் கொடிகளைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்கான கதவை பிரதமர் மோடி திறந்துவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சீன தொழிலதிபர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலேயே இத்தகைய சட்ட திருத்தத்தை மோடி செய்தார். இதன்மூலம் காதி-யின் சாரத்தையும், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தையும் மோடி தகர்த்துள்ளார். சுதந்திரப் போராட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கட்சி இப்போது காதித் தொழிலை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்துள்ளது” எனக் கூறினார்.