சீர்திருத்தங்களை செய்வது ஏன்?..பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: ‘நிர்பந்தங்கள் காரணமாக சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் அளிக்கும் என்ற அடிப்படையிலேயே அவை எடுக்கப்படுகின்றன,’ என பிரதமர் மோடி  கூறினார். மறைந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லியின்நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:  அனைவரையும் உள்ளடக்காமல் வளர்ச்சி சத்தியமா? அனைவரையும் உள்ளடக்காமல் இது பற்றி சிந்திக்க முடியுமா? உள்ளடக்கிய வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 8 ஆண்டுகளில் 9 கோடி  சமையல் காஸ் இணைப்பு இலவசமாக கொடுக்கப்பட்டது. 10 கோடி இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 45 கோடி பேருக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் 10 வருடங்களில் சராசரியாக 50 மருத்துவ கல்லுாரிகள் திறக்கப்பட்டன. பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் 209 மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான சீட்கள் 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வருடாந்திர மருத்துவ சீட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. இது போன்ற சீர்திருத்தங்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. ஆனால், அடுத்த 25 ஆண்டுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்படுகின்றன. சீர்திருத்தங்கள் அனைவருக்கும் நன்மை தரும். கொரோனா பெருந்தொற்றின்போது  கவர்ச்சிகர முடிவுகள் எதுவும் எடுக்காமல் மக்கள் நலன் சார்ந்த கொள்கையை  கடைபிடித்ததால்தான் அதில் இருந்து நாடு மீள முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.