திருவண்ணாமலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூலை 8), செஞ்சியில் சாதிச் சான்றிதழ்கள் கோரிய மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு இன்று பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூலை 8) திருவண்ணாமலை செல்லும் வழியில், செஞ்சியில் முருகன் என்பவரின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் சந்தித்து, தங்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, முதல்வர் தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மனு அளித்தார்கள்.
அம்மனுவினை கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர், உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் தமிழக முதல்வர் இன்று (ஜூலை 9) செஞ்சியில் மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் த. மோகன், மற்றும் அம்மாணவச் செல்வங்களின் பெற்றோர் உடனிருந்தனர்.