சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளிவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் வரும் 09.07.2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை ஒட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.
(i) கோயம்பேடுலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் ‘யு’ திருப்பம் மேற்கொண்டு ஈவி ஆர் சாலையை அடைந்து அமைந்தகரைக்கு செல்ல வேண்டும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தில் வழியாக சென்று அடையலாம்.
(ii) அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் பாதசாரி கடக்கும்போது தவிர தடையின்றி செல்லலாம்.
(iii) அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பும்போது, பாதசாரி கடக்கும் போது தவிர, இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம்.
(iv) கோயம்பேடுவில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து, அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும். இதன் மூலம் அரும்பாக்கம் அருகே உள்ள ஈ.வி.ஆர் சாலையிலும் நெரிசல் குறையும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
அதேபோல 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் 09.07.2022 முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.
1. 100 அடி சாலை 2வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக இருந்து கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போலச்செல்லலாம்
2. அசோக்பில்லர் வழியாக இருந்து தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் நோக்கிச்செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை மற்றும் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம்.
3. கோயம்பேடு மற்றும் வடபழனி வழியாக அசோக் பில்லர் நோக்கிச்செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாகச் சென்று, கவிஞர் சுரதா சிலை அருகில் 100 அடி சாலையினை அடைந்து அசோக்பில்லர் நோக்கிச்செல்லலாம்.
4. வடபழனியிலிருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பில்
இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக தி.நகர் அடையலாம்.
5. பி.டி.ராஜன் சாலை x பி.வி.இராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து 2வது நிழற்சாலை x 100 அடி சாலை வரை தற்பொழுதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழி பாதையாக நடைமுறைப்படுத்தப்படும். மேற்படி பி.டி.ராஜன் சாலை X இராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேராக 2வது நிழற்சாலை X 100அடி சாலையினை அடைந்து நேராக 2வது நிழற்சாலை வழியாக தி.நகர் மற்றும் அசோக்பில்லர் செல்லலாம்.
6. வடபழனி மார்கத்திலிருந்து கே.கே.நகர் செல்ல விழையும் வாகனங்கள் 2வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலை அடைந்து 100அடி சாலையில் வலது புறம் திரும்பி
கே.கே.நகரினை பி.டி. ராஜன் சாலை வழியாக அடையலாம்.
7. கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் மார்கத்திலிருந்து வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விழையும் வாகனங்கள் 4வது நிழற்சாலை வழியாக, 3வது மற்றும் 6வது நிழற்சாலை வழியாக 100அடி சாலை வலதுபுறம் திரும்பி செல்லவேண்டிய வழித்தடத்தில் செல்லலாம்.
பொதுமக்கள் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கவும், இதுகுறித்து ஆலோசனைகள் ஏதும் இருப்பின் அவற்றை கீழ்கண்ட தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.