பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் மொத்தம் ரூ.15.18 லட்சம் அபராதத்தை மாநகராட்சி விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதற்கும், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறும் நபர்கள் மீது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கடந்த இரண்டு வாரங்களில் குப்பைகள் கொட்டிய நபர்களிடமிருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும், கட்டுமான கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து 7 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களிடமிருந்து 99,400 ரூபாய் என மொத்தமாக 15 லட்சத்து 18 ஆயிரத்து 150 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு, மாநகராட்சி மற்றும் பொது இடங்களில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டியதாக 451 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை தொடர்ந்து பாயும் எனவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM