சென்னை: சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மற்றும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 22 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6.47 லட்சம், கட்டுமானக் கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.7.71 லட்சம், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டிய நபர்களுக்கு ரூ.99 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 184 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.