சென்னை: ஒப்பந்தம் அளித்தும் இதுவரை மழைநீர் வடிகால் பணிகளைத் தொடங்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு ஐந்து மீட்டர் இடைவெளியிலும் கசடு சேகரிப்பு தொட்டி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கசடு சேகரிப்பு தொட்டி இல்லாமல் இருந்தால் உடனடியாக அமைக்க வேண்டும், ஏற்கெனவே உள்ள கசடு சேகரிப்பு தொட்டிகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் வடிகால் பணிகளின் போது ஏற்கெனவே சிதிலமடைந்து மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மனித நுழைவாயில் மூடிகளை மாற்றும்போது அவற்றின் தரம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தினார்.
இதைத் தவிர்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது அபராதம் விதிக்கவும், இதுவரை பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும்போது அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து பணிகளை மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டுவதற்கு முன்பாக அருகிலுள்ள மரங்களின் கிளைகளை அகற்றவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்க்காக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் அணைத்து மழைநீர் வடிகால் பணிகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவுறும் வகையில் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.