பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளியில் போதிய கட்டடங்கள் இல்லாததால், சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மாணவ, மாணவிகள் படிக்கும் சூழலில் இருக்கிறார்கள். சரியான கழிப்பறை வசதிகள்கூட இல்லாமல் மாணவிகள் தவிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா பரணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 1984ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர், 2021ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பிலாக்குறிச்சி, வீராகண், பரணம், நாகல் குழி, இரும்பிலிகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பள்ளியில் 469 மாணவர்கள், 306 மாணவிகள் என மொத்தம் 775 பேர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியானது தரம் உயர்த்தப்பட்டாலும் போதிய கட்டட வசதிகள் உருவாக்கப்படாததால் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் ஆய்வகங்களிலும் மாணவ, மாணவிகளைப் படிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் ஒரே வகுப்பறையில் அதிக அளவு மாணவர்களை அமர்ந்து படிக்க வைக்க வேண்டிய நிலையில் பள்ளிக்கூடம் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மூர்த்தியிடம் பேசினோம். “இப்பள்ளியில் படித்த பல பேர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடந்த 2015ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தது இப்பள்ளி. இப்படிப்பட்ட பல சிறப்புகள் இருந்தும் இப்பள்ளியை தரம் உயர்த்துவது குறித்து எந்த அதிகாரிகளும் முனைப்புக் காட்டவில்லை. பதினொன்றாம் வகுப்பில் 97 மாணவ, மாணவிகளும், பன்னிரண்டாம் வகுப்பில் 120 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
சுமார் 306 மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் மாணவிகளுக்கு மலம் கழிக்கும் கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்பள்ளியில் தமிழ், அறிவியல் பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களும், பொருளியல், வணிகவியல் பாடங்களில் முதுகலை ஆசிரியர் இடங்களும் காலியாக உள்ளன.
எனவே தமிழக அரசானது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாகக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் கட்டடங்களைக் கட்டி மாணவர்களின் கனவுகளை நினைவாக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது” என்றார்.