ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின், மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஜார்ஜ் பிளாயட் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது.
ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும், போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்த போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கின. இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
போர்க்களமான இலங்கை – நாடாளுமன்ற அவசர கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு!
இந்த வழக்கில் டெரெக் சாவின் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் கைது நடவடிக்கையின் போது போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் டெரெக் சாவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.