சென்னை: தமிழகம் முழுவதும் 31-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்தப்பட்டதால் மெகா முகாம்கள் நிறுத்தப்பட்டன. வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ம்தேதி மற்றும் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இந்நிலையில், 31-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11.45 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
78.78 லட்சம் தடுப்பூசி கையிருப்பு
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.