தமிழனின் பெருமையை சொல்ல போகும் உண்மையான ‛பான் இந்தியா' படம் – ‛பொன்னியின் செல்வன்' டீசர் விழாவில் கலைஞர்கள் நெகிழ்ச்சி

கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, பார்த்திபன் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்பாகம் செப் ., 30ல் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், விக்ரம் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான், ரவி வர்மன், ஜெயமோகன், தோட்டாதரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கார்த்தி
வந்தியதேவனாக நடித்த கார்த்தி பேசும்போது, ‛‛எனக்கு இந்த மேடை முக்கியமானது. நாம் எல்லாம் தமிழன் தமிழன் என பெருமையாக சொல்கிறோம். அப்படி என்ன தமிழர்கள் செய்தார்கள். நமது மன்னர்கள் அரசாட்சி எப்படி இருந்தது, அவர்களின் சாதனை என்னவென்று கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆனால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கல்லணை, வீராணம் ஏரி, பெரிய கோயில் இப்படி சோழர்களின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த படத்தை பார்க்கும்போது தமிழனின் பெருமை தெரியும். இந்த படைப்பை கொடுத்த மணி சாருக்கு நன்றி. இந்த தலைமுறைக்கு அவர் நமக்கு கொடுத்த கிப்ட் இது.

வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது. இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு பெருமிதம் வரும். வந்தியதேவன் பற்றி எனக்கு தெரியாது. அம்மா சொல்லி சில விஷயங்கள் கேட்டேன். அதன்பிறகு ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்ன விஷயத்தை வைத்து எனது கேரக்டரை புரிந்து கொண்டேன். நாவல்களை படமாக்கும்போது நிறைய சிக்கல் உள்ளது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கற்பனை இருக்கும். இது மணிரத்னம் அவர்களின் கற்பனை. மிகவும் அழகாக உள்ளது. உங்கள் அனைவரின் அன்பு தேவை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவமாக இருந்தது.

திரிஷா
குந்தவையாக நடித்த திரிஷா பேசும் போது, ‛‛மணிரத்னம் சாருக்கு மிக்க நன்றி. இது அவரின் படம். அதில் நான் மணி சாரின் குந்தவையாக நடித்துள்ளேன். இந்த படம் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்க வேண்டும். இது இந்தியாவை தாண்டி உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய படம். பான் இந்தியா என்று சொன்னால் தென்னிந்திய சினிமாவை தான் சொல்கிறார்கள். பொன்னியின் செல்வன் இந்தியா முழுக்க பார்க்க வேண்டிய படம். இது தான் உண்மையான பான் இந்திய படம்'' என்றார்.

சரத்குமார்
பெரிய பளுவேட்டையராக நடித்துள்ள சரத்குமார் பேசும்போது : ‛‛இந்த மேடையில் நிற்பதே மெய்சிலிர்க்க வைக்கிறது. இது நமது மண்ணின் சரித்திரம். சோழர்கள் உலகம் முழுக்க பயணித்துள்ளார்கள். தமிழ் மண்ணின் புகழை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தில் நான் இருந்தேன் என்பதே பெருமையாக உள்ளது. எத்தனை படங்கள் நான் நடித்திருந்தாலும் இந்த படம் எனக்கு ஸ்பெஷல். இந்த பயணத்தில் என்னை பெரிய பளுவேட்டையராக நடிக்க வைக்க வேண்டும் என மணி சார் கேட்டார். பெருமையாக இருந்தது. இந்த படம் மிகப் பிரம்மாண்டமாய் அமையும். எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் பெருமை மிகு படமாக அமையும்'' என்றார்.

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு பேசும்போது, ‛‛இங்கு நிற்பதே பெரிய கிப்ட்டாக உள்ளது. இது மணிசாரின் படம். அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவில் வந்தேன். அவரது படத்தில் நடித்தது பெருமை. இதை பான் இந்தியா படம் என்று சொல்லுங்கள், நிறைய நடிகர்கள் நடித்தார்கள் என்று சொல்லுங்கள். ஆனால் இந்த படம் தான் முதன்முதலில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடித்த படம் என்று சொல்வேன். இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் அந்த கேரக்டராக வாழ்ந்துள்ளனர். இது தான் உண்மையான மல்டி ஸ்டார் படம். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்'' என்றார்.

ஜெயம் ரவி
அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி பேசும்போது, ‛‛இப்படி ஒரு படத்தை எடுத்தோம் என மார் தட்டி சொல்லலாம். இது மாதிரியான ஒரு விஷயம் என் வாழ்வில் நடந்தது இல்லை. திடீரென கூப்பிட்டு பொன்னியின் செல்வன் படம் பண்ண போறோம். நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்றார் மணிரத்னம். இந்த டீசரை பார்த்ததை விட அப்போது இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என அவர் சொன்னபோது தான் அதிகம் மெய்சிலிர்த்தது. பல பேரின் கனவு நனவாகி உள்ளது. இந்த கனவை சாத்தியமாக்கிய மணி சாருக்கு நன்றி. இது எங்க படம் கிடையாது, நம்ம படம் என அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும். பல பேர் முயற்சித்து முடியாமல் போனதை இன்று மணிரத்னம் நடத்தி காட்டி உள்ளார்'' என்றார்.

மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் பேசும்போது, ‛‛நான் கல்லூரியில் படித்தபோது இந்த புத்தகத்தை படித்தேன். 40 ஆண்டுகளாக இந்த கதை என்னை விட்டு நீங்கவில்லை. எம்ஜிஆர் முயற்சித்து ஏதோ சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது. அதன்பின் பலரும் படமாக்க முயற்சித்தனர், ஏனோ நடக்கவில்லை. நானே 3 முறை முயற்சித்தேன். ஒருவேளை எங்களுக்காக விட்டுள்ளனரோ என எண்ண தோன்றுகிறது. இவ்வளவு நடிகர்கள், ரவிவர்மன், தோட்டாதரணி, ரஹ்மான், ஜெயமோகன் உள்ளிட்ட ஒட்டுமொத்த அனைவரின் ஒத்துழைப்பு இன்றி இந்த படம் வந்திருக்காது. அனைவருக்கும் நன்றி'' என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ரஹ்மான் பேசும்பேது, ‛‛30 ஆண்டுகளாக எனக்கு பாஸ் மணிரத்னம் தான். நான் கத்துக்கிட்ட வித்தைகள், வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டும் என என்னை வளர்த்தவர் இவர். இது இந்தியாவின் படம். லாக்டவுன் சமயத்தில் இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாய் எடுத்துள்ளனர். அதற்கே பெரிய நன்றி'' என்றார்.

ரவி வர்மன்
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பேசும்போது, ‛‛இந்த படம் கிடைத்தது பாக்கியம். அதை விட மணிரத்னம் சார் கிடைத்தது எனக்கு பெரும் பாக்கியம். போஸ்டரில் எனது பெயர் உள்ளது. இதை விட என்ன வேண்டும். எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி, ஆசிரியர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் தமிழினின் அடையாளம். இது உலகம் முழுக்க இன்னும் பரவ வேண்டும். காலம் கடந்து தமிழ் இருக்கும் வரை இந்த படம் இருக்கும்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.