சென்னை: சென்னை குடிநீர் வாரிய துப்புரவு பணியின்போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதவரத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி ஜெட்ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது இயந்திர துளையில் ஏதேனும் கல், துணிஅடைக்கப்பட்டிருக்கிறதா என தொழிலாளி நெல்சன் பார்த்தபோது, எதிர்பாராத விதமாக இயந்திர துளையில் தவறி விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற ரவிக்குமாரும் இயந்திர துளையில் விழுந்துவிட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்சன் சிகிச்சை பலனின்றி அன்றே இறந்துவிட்டார். ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி 30-ம் தேதி உயிரிழந்தார்.
இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, நெல்சனின் மனைவி ஜான்சி, ரவிக்குமார் மனைவி புனிதா ஆகியோரிடம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தலா ரூ.15 லட்சத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.