தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகிலுள்ள அரசன்குளம் கிராமத்தைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்கவே, அந்த கிராம மக்கள் குளத்தூர் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து குளத்தூர் காவல் நிலைய போலீஸார் காட்டுப் பகுதியில் தீவிரமாக சோதனையிட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து போலீஸாரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் துப்பாக்கியுடன் இரண்டு பேர் வந்துள்ளனர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன், அசோக் ஆகியோர் எனத் தெரிய வந்துள்ளது. இருவரும் சிவில் இன்ஜினியர்கள் ஆவர். அவர்கள் வந்த காரை சோதனையிட்டதில் சுட்டுக்கொல்லப்பட்ட 7 கௌதாரிப் பறவைகள் இருந்துள்ளது. அத்துடன் வேட்டைக்குப் பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
7 கௌதாரிகள், 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இருவரிடமும் வனத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தியதுடன், இருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
“அரசன்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தும் இடமாக மாறிவிட்டது. கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன. அந்தப் பகுதியில் அடிக்கடி கண்காணிப்பில் ஈடுபடுவோம். இந்த நிலையில்தான் காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் , தொடர்ந்து 10 முறைக்கும் மேல் கேட்டுள்ளது.
காட்டுப்பகுதியில் ஏதோ இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடக்கிறதோ என, கிராம மக்கள் அச்சப்பட்டு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சொன்னார்கள். நாங்களும் காட்டுப்பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தினோம். போக்குவரத்துப் போலீஸாரையும் அலார்ட் செய்தோம். அவர்களும் வாகனச் சோதனையில் ஈடுபட்டார்கள். சட்டவிரோதமாக கௌதாரிகளை வேட்டையாடிய இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்தோம்” என்றனர் போலீஸார்.