அரித்துவார்: தெய்வங்களை இழிவுபடுத்துவோரின் தலையை வெட்டினால் ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சாமியார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ஆவண திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை, சர்ச்சைக்குரிய வகையில் பெண் தெய்வ போஸ்டரை வெளியிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக பல மாநிலங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் உள்ள பஞ்சாயத்து நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஷ்வர் சுவாமி வைரக்யானந்த் கிரி மகராஜ் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், ‘இந்து கடவுள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்திய திரைப்பட தயாரிப்பாளர்களின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு பேசுவோரின் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம் ஒன்று செயல்படுகிறது. இதுபோன்ற படங்களை எடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால், இதுகுறித்து உத்தரகாண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.