தேசிய அளவிலான கைப்பந்து போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை

வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவையொட்டி தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஜி.எஸ்.டி., பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. பெண்கள் பிரிவில் கேரளா கே.எஸ்.இ.பி. அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஐ.சி.எப். ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த போட்டியை சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு துறையில் அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர். இந்திய ஆக்கி அணியில் கூட தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள், ஆசிய அளவில் பதக்கம் பெறுவதற்கான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக 188 நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் செஸ் போட்டி சென்னையில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின் தொடக்க விழாவானது உலகமே வியக்கும் வகையில் நடைபெற உள்ளது. இதற்காக 52 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் உள் விளையாட்டு அரங்கம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் ரூ.700 கோடியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதேபோன்று தமிழகத்தில் தொகுதிக்கு ரூ.3 கோடியில் சர்வதே தரத்தில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

தமிழக முழுவதும் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.