நாடோடிச் சித்திரங்கள்: `பயணியை கதை சொல்லியாக மாற்றிய இடும்பி வனம்' | பகுதி 42

மலையின் இருளை விழுங்கும் சூரியனின் முதற் கதிரை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தூரத்து மலைகள் ஒவ்வொன்றாக பொன்னிறம் சூடுவதைக் கண்ட தேவதாரு மரத்து பறவைகள் பரவசக் கூச்சலிட்டன. மரக்கிளைகளில் ஊஞ்சலாடித் திளைத்தபடி அவை ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கொள்வது போல் கிறீச்சிட்டு பேசின. வானம் முழுவதுமாக வெளுத்து விடுவதற்குள் பறவைகள் கூடுகளைத் துறந்து பறக்கத் துவங்கின. நுனிக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை மட்டும் எதற்காகவோ காத்திருப்பது போல் ஆயத்தமாக அமர்ந்திருந்தது. அதன் உடலின் வண்ணக் கோர்வை பார்வைக்கு வசீகரமாக இருந்ததால் கதிரொளி பிரகாசத்தில் அப்பறவை மட்டும் மாய பறவை போல் மிளிர்ந்தது. அது நிஜ பறவைதானா அல்லது எனது கற்பனை வீச்சின் பிம்பமா என்று ஐயமுறும் விதத்தில் அதன் தோற்றமும் பொலிவும் இருந்தது. தேவதாரு மரம் ஒருவழியாக அமைதி கண்டது. இனி அந்தி சாயும் வரை அது இளைப்பாறிக் கொள்ளலாம் போன்றதோரு அமைதி அங்கு நிலவியது. பொன்னிற பறவை மட்டும் அதே கிளையில் அப்படியே அம்ர்ந்திருந்தது. பறப்பதற்கான ஆயத்தம் அதனிடம் தெரிந்தது. ஏதோ ஒரு சமிஞை அல்லது ஏதோ ஒரு அழைப்பிற்காக அது காத்திருந்தது. வெகுநேரமாக அதையே பார்த்துக் கொண்டிருந்த நான், அறைக்கு திரும்ப எண்ணிய பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

தூரத்து மலையிலிருந்து ஒரு அழைப்பொலி. நானும் அந்த பறவையும் ஒரே நேரத்தில் ஒலி வந்த திசையை ஏறெடுத்துப் பார்த்தோம். அவ்வொலி நீண்டு குறைவதற்குள் பொன்னிற பறவை கிளையில் காலூன்றி வானில் ஏகியது. அதன் சிறகுகள் செந்நிறம் கொண்டிருந்தன. நான் அப்பறவையின் சிறகு விரித்தலை அணு அணுவாக இரசித்துப் பார்த்தேன். காத்திருப்பின் மொத்த வலியையும் அது தனது பறத்தலுக்கான விசையாக மாற்றிக்கொண்டு பறந்ததை உணர முடிந்தது. பறவையை வழியனுப்பிவிட்டு திரும்பினேன். அப்பொழுது காற்றில் தவழ்ந்து வந்த செந்நிற இறகொன்று என் தோள்மீது அமர்ந்தது.

அவ்விறகினை கவனமாக இரண்டு கைகளுக்குள்ளும் அமர்த்தி பிடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன். விடுதி பணியாளர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நான் இறகை கவனமாக புத்தகத்திற்குள் வைப்பதைப் பார்த்த அவர் “இது ஹடிம்பாவின் தூதுவனின் இறகு” என்றார்.

‘ஹடிம்பா’, அப்பெயரை முதன்முறையாக அப்பொழுதுதான் கேள்வியுற்றேன். ஹடிம்பா யாரென்று அவரிடம் வினவினேன். “எங்கள் வன தேவதைகளின் மூதாட்டி அவள், பீமனின் காதல் மனைவி, மணாலி அருகே ஹடிம்பா வனத்தில் அவளது காற்தடம் பதிந்த பாறை இருக்கிறதே, நீங்கள் அதனை கண்டு வரவில்லையா” என்று ஏமாற்றம் கலந்த தொனியில் கேட்டார். பீமனின் காதல் மனைவி என்கிற அடையாளம் ஹடிம்பா தேவியை இடும்பி என்று எனக்கு உணர்த்திற்று.

” சரி, அந்த பறவையை ஏன் இடும்பியின் தூதுவன் என்றீர்கள்” என்றேன்.

“ஆம் அது அவளது தூதுவன்தான். துயரம் தாக்கிய மனிதர்களை இடும்பிக்கு அடையாளம் காட்டுவதுதான் அந்த தூதுவனின் பணி. அடையாளம் கண்ட இடத்திற்கு இடும்பி சென்று அம்மனிதர்களின் துயர் போக்குவாள்” என்றார் அவர்.

“அப்படியென்றால் இடும்பி மாயவித்தைகள் அறிந்த மந்திரகாரியா” என்றேன்.

“அல்ல, அவள் ஒரு கதைசொல்லி. அவள் தனது கதைகளால் மனிதர்களின் துயர் துடைப்பாள். சமயங்களில் அக்கதைகளை தாலாட்டு போல் பாடி குழந்தைகளின் மூளைக்குள் முளைக்கும் துர்கனவுகளை ஒவ்வொன்றாக களைந்தெறிவாள். இடும்பியின் கதை கேட்டு உறங்கும் குழந்தைகள் அதன் பிறகு எதனிமித்தமும் வாழ்வில் கலங்குவதில்லை. அவளது கதைகளுக்கு வல்லமையை விதைக்கும் இயல்புண்டு” என்று வாஞ்சையாக அவர் கூறியதை கேட்கையில் இடும்பி வனத்திற்கு செல்ல மனம் ஆவல் கொண்டது.

நாடோடிச் சித்திரங்கள்

இடும்பி மகாபாரத பீமனின் மனைவியாக பரவலாக அறியப்பட்டாலும், மணாலி மற்றும் அப்பகுதியின் மலைவாழ் மக்கள் அனைவரும் தங்களது குலத்தின் மூத்த தாயாகவே அவளை வணங்குகின்றனர். மலைகிராமங்களின் மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட தீராத நோயை குணப்படுத்திய வனமக்களின் தலைவியான இடும்பிக்கு மன்னர் தங்களது அரியணைக்கு செலுத்தும் முதல் மரியாதையை இடும்பியிடமிருந்தே பெற்றதாகவும் பருவமழை முடிந்து நடவு துவங்கும் பொழுது இடும்பியின் நெற்கலனிலிருந்தே முதல் விதைநெல் பெறப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மணாலியின் மையப்பகுதியில் ஓர் அடர்ந்த வனத்தினுள் இடும்பியின் கோவில் இருக்கிறது. அவ்விடத்தை சென்றடைவதில் சிரமங்கள் ஏதுமிருக்கவில்லை. வனத்தின் ஒரு பகுதி பாதைகள் செப்பனிடப்பட்டு இடும்பி கோவிலுக்கு வழியமைந்திருந்தது. வனப்பகுதியின் நுழைவிடத்தில் சில பெண்கள் காட்டு முயல்களை கைகளில் அணைத்துப் பிடித்து நின்றிருந்தனர். அடர்ந்த மயிற்பரப்புடைய அம்முயல்கள் நாட்டு முயல்களைவிட பெரிதாகவும் அவற்றின் பார்வை கூர்மையாகவும் இருந்தன. சுற்றுலா வருபவர்கள் முயல்களுடன் படமெடுத்து கொள்ள அப்பெண்கள் உதவினர். அதற்கு சிறிதளவு கட்டணமும் வசூலித்துக் கொண்டனர்.

நாடோடிச் சித்திரங்கள்

இடும்பி வனத்திற்குள் பிரவேசித்ததும் மனமானது பல்வேறு உணர்வு விசைக்கு ஆட்படுவது போல் எனக்குத் தோன்றியது.

“இடும்பி எங்கள் மலைகளின் மூதாட்டி. வழிபோக்கனாக இங்கு வந்த பீமனிடம் காதல் கொண்டு அதன் சாட்சியாக ஒரு மகவையும் சுமந்தவள். அவனையும் பீமனையும் காக்கும் பொருட்டு தியாகம் செய்யத் துணிந்தாள். “மகனே என் காதலனின் உயிர் காக்க அவனுடைய நினைவாக பெற்றெடுத்த உன்னையும் இழக்க நானொரு நாள் துணிவேன். அன்று நீ இந்த தாயை மன்னித்தருள வேண்டும்” என்று மன்றாடிய பேதை எங்கள் இடும்பி. அவளுக்கு காக்கவும் இரட்சிக்கவும் மட்டுமே தெரியும். பறவைகள் அவளது தூதுவர்கள். முழுநிலவின் அழைப்பை யாசித்து ஓநாய்கள் அழும் நாளில் அவள் பாதங்கள் பனித்தகடுகளின் மீது நடந்து செல்லும். உருகிய பனித்தகடுகள் சுனையாக மீண்டும் பிறந்து, ஓடையாக தவழ்ந்து பேரருவியாக பாய்ந்து வீழ்ந்து நதியாக பிரவாகித்து நாகரிகங்கள் அமைத்து, மனிதர் தம் தலைமுறைகள் பல்கி பெருக வழிவகை செய்து கொடுத்தபின் கடலோடு சங்கமிக்கும் அச்சிறு சுனையின் பிறப்பிடம் இடும்பியின் பாதம்.” என்று என் செவிகளுக்கு மட்டும் கேட்பது போல் யாரோ உரைப்பது போலிருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்

இடும்பியின் உறைவிடம் என்று எழுதப்பட்டிருந்த குகையினுள் பிரவேசிக்க அனுமதியில்லை என்று அங்கு எழுதப்பட்டிருந்தது. இடும்பியின் கால்தடம் அங்கிருப்பதனால் அவ்விடம் அப்பகுதி மக்களால் புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குகையைச் சுற்றி மர வேலைப்பாடுகளால் ஆன வழிபாட்டு தலம் அமைக்கப் பட்டிருந்தது. பல்வேறு மிருகங்களின் தலைகள் பதனிடப்பட்டு அவளது வசிப்பிடத்தின் மீது தோரணமாக வைக்கப்பட்டிருந்தன. அவ்விடத்தில் அமானுஷ்யத்தின் வெப்பம் படர்வதை என்னால் மட்டுமே உணர முடிந்தது போலிருந்தது. மற்றவர்கள் புகைப்படம் எடுப்பதும் காட்டு முயல்களுடன் விளையாடுவதுமாக இயல்பாகவே இருந்தனர். அச்சூழலின் அழைப்பை ஏற்கவுமுடியாமல் மறுக்கவுமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எனது தவிப்பை கண்ட கோவில் பணியாளர் என்னை அருகே அழைத்து “நீங்கள் மட்டும் குகையினுள் செல்லுங்கள். யாரையும் உடனழைக்க வேண்டாம்” என்று சன்னமான குரலில் கூறினார். அவருக்கு நன்றி கூறும் விதமாக அவரை வணங்கி விட்டு குகையினுள் பிரவேசித்தேன்.

வெளியுலகின் வெளிச்சமும் இரைச்சலும் சட்டென மறைந்து ஒரு நிரந்தர அமைதி மனதை ஆட்கொண்டது. கண்கள் குகையின் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடின. ஒரு பாறையிலிருந்து மெல்லிய ஓடையொன்று சுரந்தபடி இருந்தது. அந்நீரை தலையில் தெளித்துக் கொள்ளுமாறு பூசாரி சைகையில் உணர்த்தினார். நான் குனிந்து சுனையின் நீரை இரு கைகளாலும் அள்ளியெடுத்து பருகினேன். நீரின் குளுமையும் இனிமையும் நொடி நேரத்தில் குருதியின் நாளங்களில் கலந்து பாய்வது போலிருந்தது. நான் ஓரிரு முறைகள் நீரை அள்ளி பருகினேன். பல நூற்றாண்டுகளாக தாகம் தவித்த ஆன்மாவின் வேட்கை தணிவது போலிருந்தது. மனம் தெளிவடைந்த பிறகு அங்கு அச்சுனையின் கீழே பாறைகளின் நடுவே பூமியில் ஆழப்பதிந்திருந்தது கால் தடம் ஒன்று. கண்கள் அத்தடத்தை உள்வாங்க மறுத்தன. நான் பாறையின் அருகே அமர்ந்து தாழ்ந்து கவனித்தேன். அது சாதாரண மனிதனின் பாத அளவைக் காட்டிலும் சில மடங்குகள் நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. ‘இடும்பியின் பாதம்’ என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

ஒரு பாதத்தை தரையில் ஊன்றியவளது மற்றொரு பாதம் எங்கு பதிந்திருக்கிறது என்று தேடினேன். ஆனால் அங்கு ஒரு பாதத்தடம் மட்டுமே இருந்தது. தெளிந்த மனம் மீண்டும் குழம்பியது. மனதிற்குள் பல்லாயிரம் கேள்விகள் முளைத்தன. நான் கோவில் பூசாரியிடம் வினவலாம் என்று அவரைத் தேடினேன். அவரை காணவில்லை. வெகு நேரம் ஆராய்ந்து பார்த்தபின் குகையை விட்டு வெளியேறினேன். இடும்பியின் குகையை சில முறைகள் சுற்றி வந்தேன். அந்தி சாய்வதற்கான அறிகுறியாக பனிப்போர்வை கோவிலின் கூரைவரை படர்ந்து விட்டிருந்தது.

அவள் தனது மற்றொரு பாதத்தடத்தை எங்கு பதித்திருப்பாள் என்கிற கேள்வியுடன் இடும்பி வனத்திலிருந்து வெளியேறினேன். வனத்தின் வாயிலில் ஒரு மூதாட்டி காட்டு முயல்களை குளிருக்கு பாதுகாப்பாக மூங்கில் கூடைகளுக்குள் கிடத்திக் கொண்டிருந்தாள். மனதில் குழப்பத்தின் அலைகள் மோதியபடி இருந்தன. மூதாட்டி எனக்காக காத்திருந்தவள் போல “என்ன ஆயிற்று. மனதில் என்ன குழப்பம் என்றாள்”

“அதில்ல தாதிமா, இடும்பியோட ஒரு பாதத்தடம்தான் பாக்க முடிஞ்சது. இன்னொரு தடம் எங்கிருக்கும்னு யோசிக்குறேன். உங்களுக்கு தெரியுமா” என்றேன்.

“ஓ.. தெரியுமே. அது உன் மனசுல இருக்கும். அவளோட பாதத்தடம் யார் கண்ணுக்கும் தெரியாது. உனக்குத் தெரிஞ்சிருக்குன்னா இடும்பி தேவி உன்கிட்ட தன்னை வெளிப்படுத்திருக்கான்னு அர்த்தம். அவளோட பாதத்தடத்தை இனி உனக்குள்ள நீ தேடு” என்றாள்.

நான் அவ்விடத்திலேயே சிலையாக உறைந்து நின்றேன். அங்கு நிகழ்ந்தவை யாவும் இன்றளவும் எனக்கு புதிரான நிகழ்வுகளாகவே தோன்றுவதுண்டு. சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். மூதாட்டியும் மறைந்து போனாள்.

இடும்பியின் கதைகள் என்பு தோற்போர்த்திய நிர்வாணத்தைக் காட்டிலும் நிர்வாணமானவை. அவளது கதைகள் எலும்பினுள் ஊடுருவும் சக்தி கொண்டவை. நிணநாளங்களின் திண்மையைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவை. அக்கதைகள் இரவு நேரத்தில் குழந்தைகளின் மனதில் முளைக்கும் துர்கனவுகளை கிள்ளியெறியும் தன்மை பொருந்தியவை.

இடும்பியின் பாதத்தடம் எனக்குள் பதிந்ததை அந்நேரத்தில் கூடடைந்த பறவைகளின் கீச்சொலிகள் பறைசாற்றின. அந்நாளின் உதயத்தில் நான் கண்ட பறவை இடும்பி வனத்தின் நெடுமரத்தின் மீது வந்தமர்ந்திருந்தது. என்னை அவ்விடம் அழைத்து வரவே அப்பறவை காத்திருந்தது போல் எனக்கு அப்பொழுது தோன்றியது. மீண்டும் ஒரு செந்நிற இறகு காற்றில் மிதந்து வந்தது. இம்முறை அந்த இறகை நான் என் கைகள் நீட்டி பெற்றுக் கொண்டேன். இடும்பியின் தூதுவன் பகர்ந்த செய்தியுடன் அவ்விடம் விட்டு வெளியேறினேன்.

தேவதை கதைகளின் விதைநெல் சிலவற்றோடு இடும்பி என்னை வழியனுப்பினாள்.

நாடோடிச் சித்திரங்கள் முற்றும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.