அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தியில், “தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனை பெரிய இழப்புகள் வந்தாலும் மாற்றுக்குறையாத அன்போடும், மாறாத உறுதியோடும் தியாகங்களைச் செய்பவர்களுக்கு முழுமையான இறையருள் கிடைக்கும் என்பதற்கு பக்ரீத் திருநாள் உதாரணமாக இருக்கிறது. தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும், வலிமையும் எப்போதும் உயர்வானது.
இறை தூதர் இப்ராகிம் அவர்களின் தியாகத்தைப் போற்றும் இப்புனித நாளில் நமக்காக தியாகங்களைப் புரிந்தவர்களை நன்றியோடு நினைத்து பார்ப்போம். மனித சமுதாயத்தின் மலர்ச்சிக்கும், சக மனிதர்களின் நல்வாழ்வுக்கும் அவரவர் அளவில் இயன்ற தியாகத்தையும், தர்மத்தையும் செய்திடுவோம்.
சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திடுவதற்கு பக்ரீத் திருநாளில் உறுதி ஏற்றிடுவோம்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள வழுத்துச் செய்தியில், “தியாகப் பெருநாளாம் பக்ரீத்தைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இறை தூதரான நபிகள் நாயகம் காட்டிய வழியில், சகோதரத்துவம், சமாதானம், ஈகை, மனிதநேயத்துடன் பயணித்து, அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவுவோம்.
உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைக்கப் பாடுபடுவோம். மொழி, இனம், தேசம் என்ற எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் நட்பு பாராட்டுவோம். மதம், சாதி, கலாச்சாரத்தை முன்னிறுத்தி, நம்மைப் பிரிக்க நினைப்பவர்களிடமிருந்து ஒதுங்கி, ஒற்றுமையே வேற்றுமை என்ற இந்தியப் பண்பாட்டை நிலைநிறுத்துவோம்.