கடலூர்: பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக 2 ஆயிரம் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் சுருக்குமடி வலைக்கு எதிராக கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி வீராம்பட்டினம் ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 7ம் தேதி நடந்தது. பரங்கிப்பேட்டை விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை, இரட்டை மடி வலை, அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் படகுகள் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது. இவைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இவற்றைத் தடுத்து நிறுத்த கோரி வரும் 9ம் தேதி சாமியார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று (ஜூலை.9) காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார் போட்டையில் பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்தும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடியுடன் சுருக்கு மடி வலையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் இப்போராட்டத்தில் கலந்து பேசினார். மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் கடலூர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள், புதுச்சோயை சேர்ந்த வீராம்பட்டினம் உள்ளிட்ட 30 கிராம மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.