மகாராஷ்டிராவில் புதிய அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பதவியேற்றுள்ளது. புதிய அரசு பதவியேற்றதை எதிர்த்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி சென்று நேற்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரம், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு இன்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சரவை விரிவாக்கம் மட்டுமல்லாது சுப்ரீம் கோர்ட்டில் வரும் திங்கள் கிழமை உத்தவ் தாக்கரே தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடைபெறுகிறது. இது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவருமே `தங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர். இருவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இச்சந்திப்புகளுக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். ஏக்நாத் ஷிண்டே இது குறித்து பேசுகையில், “உத்தவ் தாக்கரேயிடம் பாஜகவுடன் கூட்டணி வைக்கும்படி 3-4 முறை வலியுறுத்தினேன். மகாவிகாஷ் அகாடியில் கூட்டணி வைத்திருப்பதை விரும்பாத சேனா எம்.எல்.ஏ.க்கள் இது குறித்து உத்தவ் தாக்கரேயிடம் பேச முயன்று தோற்றுப்போனார்கள். அதன் பிறகுதான் தனியாக வந்தோம். எங்களிடம் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனாவாகும். எங்களை சட்டமன்ற சபாநாயகர் உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து இருக்கிறார். கட்சியின் சின்னம் விவகாரத்தில் நீதித்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. உத்தவ் தாக்கரே பால் தாக்கரேயின் இந்துத்துவாவை புறக்கணித்தார். ஆனால் பாஜக அதனை ஆதரித்தது” என்று தெரிவித்தார்.
துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “முன்பு என்னை கட்சி முதல்வராக்கியது. இப்போது கட்சி சொல்வதை கேட்டுள்ளேன். அநீதி இழைக்கப்படவில்லை. இயற்கையான எங்களது கூட்டணி புதுப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.