இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது பிரிட்டன் அரசியல் களத்தில்.
முதலில் போர்க்கொடி தூக்கி ராஜினாமாவை பதிவு செய்த ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கான போட்டாப் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பிரதமராவதை இந்தியாவும் உற்று நோக்குகிறது. தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதை ட்விட்டர் வாயிலாக பகிரங்கமாக அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார் ரிஷி சுனக். இந்நிலையில் யார் இந்த ரிஷி சுனக் என்பது தொடர்பான பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறப்பும், படிப்பும்: ரிஷி சுனக்கின் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். ஆகையால், பிறப்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனானார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். இங்கிலாந்து அரசியல் களத்தில் ஆசை உள்ளவர்கள் எல்லாம் ஆக்ஸ்ஃபோர்டில் இணைந்து தத்துவம் பயில்வது எழுதப்படாத விதி என்பதுபோல் ஆகிவிட்டது. ரிஷி அதற்கு விதிவிலக்கில்லை என்று நிரூபித்தார். ஆனால் மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தர்.
கை கூடிய காதல்: அங்குதான் அவர் காதலிலும் விழுந்தார். தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்ஷதா மீது காதல் வயப்பட்டார். இருவரும் காதலை பகிர்ந்து கொள்ள. பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
பெருந்தொழிலதிபர் வீட்டின் மருமகனானால் அந்த தொழிலை கையிலெடுக்க வேண்டும் தானே. அது தான் ரிஷிக்கும் நடந்தது. ரிஷி, மனைவி துணையுடன் டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார்.
அரசியல் வேட்கை: ஆனாலும் அவருக்குள் அரசியல் ஆசை துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதனால், கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
ஆரம்பத்தில் சில ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தவர் வீட்டு வசதி, உள்ளாட்சித் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். காலநிலை மாற்றம் விவகாரத்தில் தெரசா மே பதவி விலக, இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் போரிஸ் ஜான்சன். அப்போது நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல செயலரானார் ரிஷி. கிட்டத்தட்ட நிதியமைச்சருக்கு நிகரான பதவி இது.
2019 தேர்தலில் மீண்டும் ரிஷி வெற்றி பெற்றார். அவருக்கு இணையமைச்சர் பதவி கிடைக்கலாம் என கருதப்பட்டது. எதிர்பாராத திருப்பமாக, போரிஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜாவித் ராஜினாமா செய்ய, ரிஷிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. இங்கிலாந்து நிதியமைச்சரானார்.
மனைவியால் எழுந்த சர்ச்சை: ரிஷி சுனக்கின் கல்வி, நிர்வாகத் திறமை, சர்வதேச நிதி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றோடு கரோனா காலத்தில் சாதுரியமாக செயல்பட்டது ஆகியனவற்றால் அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த செல்வாக்கு சீட்டுக்கட்டு கோட்டை போல் சரிந்தது. அதற்குக் காரணம் ரிஷி சுனக்கின் மனைவி மீது எழுந்த வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள்.
அக்ஷதா ரிஷி சுனக்கின் மனைவியான பின்னரும் பிரிட்டன் குடியுரிமையை கோராதிருந்தார். இங்கிலாந்தின் சட்டப்படி இதற்கு உரிமை உண்டு. இவ்வாறு குடியுரிமை பெறாது பிரிட்டனில் வசிப்பவர்கள், அந்நாட்டில் ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்தினால் மட்டும் போதும். இந்த வகையில் பிரிட்டனில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் அக்ஷதா அவற்றின் வருவாய்க்கான வரியை மட்டுமே பிரிட்டன் சட்டத்துக்கு உட்பட்டு செலுத்தினார். ஆனால் தனது இந்திய சொத்துக்களுக்கான வரியை அவர் பிரிட்டனில் செலுத்தவில்லை.
இந்த விவகாரம்தான் ரிஷிக்கு செக் வைத்துள்ளது. ஆனால் அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு பிரதமர் போட்டியில் முன்னேறிச் செல்வார் ரிஷி என்றும் சில கணிப்புகள் கூறுகின்றன.