திண்டுக்கல்: புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மித்சிங்குக்கு, காந்திகிராம பல்கலை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தராக பணியில் இருந்த மாதேஸ்வரன் பணி விலக்கியதையடுத்து பொறுப்பு துணைவேந்தராக ரெங்கநாதன் நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக இவர் பொறுப்பு துணைவேந்தராக பணிபுரிந்துவந்தநிலையில், திடீரென ரெங்கநாதனை பணி விலகச்செய்துவிட்டு, புதுச்சேரி பல்கலை துணைவேந்தராக உள்ள குர்மித்சிங் கிற்கு கூடுதல் பொறுப்பாக காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பதவியை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பொறுப்பு துணைவேந்தராக இருந்த ரெங்கநாதன் உடனடியாக பொறுப்பு துணைவேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு: காந்திகிராம பல்கலை துணைவேந்தரை நியமிக்க மத்திய அரசு குழு அமைத்து சில தினங்களே ஆனநிலையில் அதற்குள் கூடுதல் பொறுப்பிற்கு பல்கலை அல்லாத வெளிநபரை நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வழக்கமாக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் உள்ள மூத்த பேராசிரியரை பொறுப்பு துணைவேந்தராக நியமிப்பது வழக்கம். தற்போது விதியை மீறி நியமித்துள்ளதாக கூறி பல்கலை ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்கள் ஆனந்தகுமார், வில்லியம் பாஸ்கரன், பாலசுந்தரி ஆகிய மூன்று பேர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மித்சிங் காந்திகிராம பல்கலை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பை வரும் செவ்வாய்கிழமை ஏற்பார் என தெரிகிறது.