Tamilnadu Govt cancels spot employment registration at schools: 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் பள்ளிகளிலே வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள், தங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன், அவர்கள் படித்த பள்ளிக்கூடங்களிலே வேலைவாய்ப்பைப் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது. மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளைப் படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த வசதி 2011 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: பொறியியல் கல்லூரிகள் ரேங்கிங்: அண்ணா பல்கலை. செய்தது சரியா?
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் நிகழ்நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சரின் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டபடி, நிகழ்நிலை வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்பட்டது.
மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவு அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான http://www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழாண்டில் அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் நேரடியாக மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை “இ-சேவை” மையங்கள் வாயிலாக செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை அனைவரும் அறியச்செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.