மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம் ஹவர்கேடா – நந்த்கிர்வாட் கிராமத்தின் இடையே உள்ள உயரழுத்த மின் கம்பியில் பழுது நீக்கும் பணி பிற்பகல் 3 மணி அளவில் நடந்தது.
இந்த பணியில், கணேஷ் தீட் (30), ஜெகதீஷ் முர்குண்டே (35), பாரத் வர்கட் (32) மற்றும் அர்ஜுன் மகர் ஆகிய மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, மின் கம்பியில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 ஊழியர்களையும் மின்சாரம் தாக்கியது.
இதில் உடல் கருகி தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து, கன்னட் காவல்நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 4 ஊழியர்கள் பலியான சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.