ஒரு பக்கம் வறள் புல்வெளிகள் சுருங்கி வர இன்னொரு பக்கம் விளைநிலங்களும் சம அளவில் சுருங்கி வருகின்றன. விரைவாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலும் மேய்ச்சல் நிலங்களை சுருக்கி விட்டன. இப்படி பல்வேறு காரணங்களால் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு மேய்ச்சல் தொழில் செய்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி விட்டது.
மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருவோரின் பிரச்னைகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. கீதாரிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நாடோடிகள் போல நாடு முழுவதும் நாட்டு மாடுகள், ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருபவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு அரசின் எந்த சலுகைகளையும் உரிமைகளையும் பெற முடியாத குரலற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழக அளவில் மண்ணுக்கு நன்மை செய்யும், சூழலை வளப்படுத்தும், நாட்டு மாட்டினங்களை பாதுகாக்கும் பணியை எதிர்பார்ப்பில்லாமல் பாரம்பரியமாக செய்து வரும் மேய்ச்சல் தொழிலாளர்களை மதுரையை சேர்ந்த தொழுவம் என்ற அமைப்பினர் ஒருங்கிணைத்து அவர்களுக்கு உதவி வருகிறது.
இதுபோல் நாடு முழுவதும் சில அமைப்புகள் மேய்ச்சல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இயங்கி வருகிறது.
காடுகள், மலைகளில் மேய்ச்சலில் ஈடுபடக்கூடாது என்று சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவால் பாரம்பர்ய மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறையும். சூழல் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் இந்தியா முழுவதும் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், மலைகளில், காடுகளில் மேய்ச்சல் அனுமதி மறுத்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சார்ந்த மேய்ச்சல் சமூக ஆய்வாளர்கள் சார்பாக ‘National Consultation on Pastoralism and the Forest Rights Act..’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் டெல்லியில் 2 நாள்கள் நடைபெற்றது.
கருத்தரங்கில் எடுத்த முடிவுகளை அடிப்படையாக கொண்டு இரண்டாம் நாள் இறுதி அமர்வில் மத்திய கால்நடைகள், பால் பொருட்கள்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா கலந்துகொண்டு பேசினார்.
ஏற்கனவே தமிழக மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சார்பாக பல்வேறு போராட்டங்களின் மூலம் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுவோர் சந்திக்கும் பிரச்சனைகள் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்தும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் , மேய்ச்சல் தடைக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்பை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற வழக்கில் மேய்ச்சல் தொழில் செயல்பாட்டு அமைப்பான மதுரையை சேர்ந்த தொழுவம் இணைந்துள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் பாரம்பரிய மேய்ச்சல் சமூக உரிமை சட்டப்படி மீட்கப்படும் என்று கருத்தரங்கில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.