கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக ஆர்.காமராஜ் பதவி வகித்துக் போது, தஞ்சாவூரில் மிகப் பிரமாண்டமான உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
விமான ஆம்புலனஸ் வசதியுடன் இந்த மருத்துவமனை பிரமாண்டமாக உருவாக்கப்படுவதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. இப்படி ஒரு மருத்துவமனை கட்டுமளவுக்கு, காமராஜூக்கு எப்படி பணம் வந்தது என உள்ளூர் தி.மு.க.-வினரும் அ.ம.மு.க.-வினரும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். ஆனால் இது தொடர்பாக ஆர்.காமராஜ் எந்த ஒரு விளக்கமும் அளிக்காமலே இருந்து வந்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ஆர்.காமராஜ் மற்றும் இவரின் மகன்களான மருத்துவர்கள் இனியன், இன்பன் ஆகியோர் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை சந்தித்து தஞ்சை மருத்துவமனையின் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படம் வெளியாக, இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியது.
இச்சூழலில் தான், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர், ’கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து ஆர்.காமராஜ் மற்றும் இவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
நேற்று தனது வீட்டில் பல மணிநேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையின் முடிவில் பேசிய ஆர்.காமராஜ், தஞ்சையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மருத்துவமனை குறித்து முதல்முறையாக பொதுவெளியில் பேசினார்… “அனைத்து இந்திய அண்ணா திமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். இதன் வளர்ச்சியை, வேகத்தை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. என் வீட்டிலும் என்னுடன் தொடர்புடையவர்கள் வீட்டிலும் காலையிலிருந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதனை அரசியல் ரீதியாகவும் சட்டப்படியும் எதிர்கொண்டு வெற்றிப் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்று முதல் இன்று வரை அதிமுகவின் வீறு கொண்ட தொண்டனாக செயலாற்றி வருகிறேன். 39 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றி வருபவன் என்ற வகையில், இந்த காமராஜையோ அல்லது இந்த இயக்கத்தின் ஒரு சாதாரண தொண்டனையோ தொட்டுக்கூட பார்க்க முடியாது.
இன்றைய ஆளுங்கட்சி, மாபெரும் எதிர்கட்சியான அண்ணா திமுக-வை முடக்கிவிடலாம் என நினைக்கிறது. ஒருநாளும் அது நடக்காது. அண்ணன் எடப்பாடியாரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பொதுக்குழு நடைபெறவுள்ளது. ஒற்றை தலைமை வந்தால் எல்லா கட்சிகளுக்கும் ஆட்டம் கண்டுவிடும். அதனால் தான் ஒற்றைத் தலைமை வராமல் தடுக்க பலரும் சேர்ந்து செயல்படுகிறார்கள். அதனால் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது தவறான முன்னுதாரணம். அது நிச்சயம் நடக்காது. என் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியிருக்கிறார்கள். நான் எதிர்கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆளுங்கட்சியினர் என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம், ஆனால் என் உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இன்று நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தங்கள் கைப்படவே எழுதிக் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்கள்.
நான் கடுமையாக உழைப்பவன். பொதுவாழ்க்கையில் எப்படி கடுமையாக உழைக்கிறேனோ அதுபோல் விவசாயத்திலும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். என் மகன்கள் இரண்டு பேருமே மருத்துவர்கள். மிகபெரிய இரு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன்கள் வாங்கி தான் தஞ்சையில் ஒரு மருத்துவமனையை கட்டியுள்ளார்கள். டாக்டர்கள் மருத்துவமனை தானே கட்டமுடியும்’’ என தெரிவித்தார்.