வருங்காலத்தில் இந்த பாடப்பிரிவு முக்கியத்துவம் பெறும்: மாணவர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அட்வைஸ்

மத்திய மண்டலத்திற்குட்பட்ட  திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் 12-ம் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காவல்படைத் தலைவர் சைலேந்திர பாபு கலந்து கொண்டார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், ’தழைக்கட்டும் நமது தலைமுறை’ என்ற தலைப்பில்,  மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்வு  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையேற்று உரையாற்றியது: நான் முதல்வன் திட்டம் மாணவர் நலனுக்காகவே தமிழக முதல்வர் உருவாக்கி உள்ளார். மாணவர்கள் தான்’ எடுத்துள்ள பாடக்கல்வியை முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும். வருங்காலத்தில் செயற்கை அறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ) முக்கியத்துவம் பெறும்.

எனவே, மாணவர்கள் இதில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். வருங்கால திட்டத்தை மாணவர்கள் தற்போதே வகுத்துக்  கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்கள் திறமை, ஆற்றல்களை படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் போட்டி நிலவுகிறது. எனவே, போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்துல் கலாம் போன்ற சான்றோர்கள் தங்கள் சொந்த முயற்சிகளால் முன்னேறியவர்கள், அவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை விழிப்புடன் கவனிக்க வேண்டும். அரசியல் ரீதியாக, அரசு ரீதியாக சர்வதேச நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது குறித்து தெரிந்து கொள்ள செய்தித்தாள் படிக்க வேண்டும். மாணவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடிதம், கட்டுரை எழுதுவதாய் இருந்தால் கூட சிறு தவறு இன்றி எழுத வேண்டும்.

தமிழ், ஆங்கில மொழித்திறனுடன் உடல் மொழியும் முக்கியம். இதனை அறிந்து கொண்டால் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் உடல், பொருள், ஆவியை தங்களுடைய குழந்தைகளுக்காக அர்ப்பணித்து உள்ளார்கள். எனவே அவர்களை கைவிட்டு விடாதீர்கள்.

குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், அதில் முழு திறனை வெளிப்படுத்துங்கள். பின்வரும் காலத்தில் அது உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல காவல் துறைத்தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

செய்தி: க. சண்முக வடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.