இந்திய நிகழ்வுகள்
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்மும்பை ‘மாஜி’ கமிஷனர் மீது வழக்கு –
புதுடில்லி-பங்கு சந்தை ஊழியர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதற்காக, என்.எஸ்.இ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர், பங்கு வர்த்தகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே ஆகியோர், 2009 – 17 காலகட்டத்தில், பங்கு சந்தை ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக சி.பி.ஐ., நேற்று வழக்குப்பதிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி, மும்பை, புனே, லக்னோ உட்பட சஞ்சய் பாண்டேவுக்கு சொந்தமான 20 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். போலீஸ் அதிகாரியான சஞ்சய் பாண்டே, ‘ஐ செக் செக்யூரிட்டீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் இவரது மகன் மற்றும் தாயார் இயக்குனர்களாக இருந்தனர். தேசிய பங்கு சந்தையின் பாதுகாப்பு தணிக்கை பணிகளை செய்து வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களில், ஐ செக் செக்யூரிட்டீசும் இடம் பெற்று இருந்தது.
ஆற்றுக்குள் பாய்ந்த கார்; 9 பேர் பலி
நைனிடால்-உத்தரகண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து, சுற்றுலா பயணியர் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரை சேர்ந்த 10 பேர் உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஒரு காரில் சுற்றுலா வந்திருந்தனர். சுற்றுலா முடிந்து நேற்று முன் தினம் மாலை ஊருக்கு புறப்பட்டனர். உத்தரகண்டின் ராம்நகரில் உள்ள தேலா ஆற்றுப்பாலத்தில், நேற்று அதிகாலை 5:45 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆற்றுக்குள் பாய்ந்தது. காரில் இருந்த நஸியா, 22, என்ற பெண் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு ராம் நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற ஒன்பது பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழக நிகழ்வுகள்
வீடு புகுந்து இளம்பெண்ணை குத்தி கொன்ற காதலன்
மதுரை -மதுரை பொன்மேனியில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த அபர்ணாவை 19, காதல் விவகாரத்தில் வீடு புகுந்து குத்திக்கொன்ற ஹரிஹரனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பொன்மேனி குடியானவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. வீட்டருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் அபர்ணா பிளஸ் 2 முடித்து, ஜூலை 17 நடக்கும் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். இவரை விராட்டிபத்து ஹரிஹரன் என்பவர் காதலித்தார்.மூன்று மாதங்களுக்கு முன் அபர்ணா வீட்டிற்கு வந்து பெண் கேட்டார். பெற்றோர் மறுத்துவிட்டனர். அபர்ணாவுக்கு கூத்தியார்குண்டைச் சேர்ந்தவருடன் திருமணம் நிச்சயித்தனர். ஆக.21 ல் திருமணம் நடக்கவிருந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு அபர்ணா வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார்.
பெற்றோர் பலசரக்கு கடையில் இருந்தனர். தங்கை பள்ளிக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த அபர்ணா நிச்சயிக்கப்பட்டவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் ஹரிஹரன் தகராறில் ஈடுபட்டார். போனை ‘கட்’ செய்து உடனடியாக அபர்ணாவின் பெற்றோருக்கு நிச்சயிக்கப்பட்டவர் தகவல் தெரிவித்தார்.பதட்டத்துடன் அபர்ணாவின் தாயார் வீட்டிற்கு வந்தபோது ஒரு பையுடன் ஹரிஹரன் வெளியே வந்தார்.
அவரை பிடிக்க முயன்றபோது பையை விட்டுவிட்டு தப்பி ஓடினார். வீட்டினுள் சென்று பார்த்தபோது கழுத்து, மார்பு, கையில் குத்தப்பட்ட நிலையில் அபர்ணா கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஹரிஹரன் பையில் கத்தி, சுத்தியல், கையுறை இருந்தது.எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தந்தை கண் முன் மகன் பலி
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே குமாரபுரத்தை சேர்ந்த மாணிக்கம் 27, தந்தை சமுத்திரபாண்டி டூவீலரில் சென்ற போது மண் ஏற்றி வந்த டிராக்டர் டயர் வெடித்து டூவீலர் மீது மோதியதில் தந்தை கண் முன் மகன் பலியானார்.
குமாரபுரத்தை தந்தையும், மகனும் மொட்டனூத்து அருகே உள்ள தங்களது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். மாணிக்கம் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். தந்தை பின்னால் அமர்ந்திருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. குப்பாம்பட்டி விலக்கு அருகே சென்றபோது ட்ராக்டர் டயர் வெடித்ததில் கட்டுப்பாடு இழந்து டிராக்டர் டூவீலர் மீது மோதியது. பின்னால் அமர்ந்திருந்த சமுத்திரபாண்டி தூக்கி வீசப்பட்டார். மாணிக்கத்தின் தலையில் டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சமுத்திரபாண்டி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்ற 5 கடைகளுக்கு சீல்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். முதல் கட்டமாக இப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்தனர். இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 கடைகளுக்கு நேற்று தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சிறுமியிடம் சில்மிஷம்; பூஜாரி கைது
கூடலுார் : கேரளா ஆரன்முலாவை சேர்ந்தவர் பிபின் 34. இவர் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவில் உள்ள கோயிலில் பூஜாரியாக இருந்தார். அப்பகுதியில் வசிக்கும் ஒன்பது வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து பூஜாரியை வண்டிப்பெரியார் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் கைது செய்தார்.
அசைவ ஹோட்டலில் தரமற்ற இறைச்சி அழிப்பு
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 3 அசைவ ஓட்டல்களில் ஆய்வு செய்த போது தரமற்ற கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தியது தெரியவந்தது.உடன், தரமற்ற 16 கிலோ எடையுள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், ஓட்டலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்து எச்சரிக்கை விடுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்