10 மாத குழந்தைக்கு ரயில்வே பணி, ஆச்சர்யமான பணி நியமனம்; காரணம் என்ன?

அரசு ஊழியர்கள் தங்களின் பணிக்காலத்தில் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழக்கும்பட்சத்தில், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கல்வித்தகுதிக்கு ஏற்ப கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும். இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இதுபோன்றதொரு நிகழ்வு சுவாரஸ்யத்துடன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், 10 மாதக் குழந்தைக்குக் கிடைத்திருக்கும் அரசுப் பணி.

ரயில்வே துறை

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார். இவர், அங்குள்ள பிலாய் பகுதியில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றிவந்தார். கடந்த மாதம், தன் மனைவி மஞ்சு யாதவ் மற்றும் குழந்தை ராதிகா யாதவ் ஆகியோருடன் ராஜேந்திரகுமார் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, மூவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ராஜேந்திர குமாரும் ராதிகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிஞ்சுக்குழந்தையான ராதிகா யாதவ், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாள்.

ரயில்வே விதிகளின்படி ராஜேந்திர குமாரின் குடும்பத்துக்கான அனைத்து உதவிகளும் ராய்ப்பூர் ரயில்வே கோட்ட அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டன. தன் பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் ராதிகாவுக்கு, விதிகளின்படி அரசுப் பணி ஒதுக்கீடும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துபூர்வமான ஆவணப்பதிவு, ராய்ப்பூரிலுள்ள ரயில்வே கோட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதனை, தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) உறுதிசெய்துள்ளது.

ரயில்வே துறை

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அலுவல் ரீதியான நடைமுறையில், கைரேகையைப் பதிவு செய்தபோது விவரம் அறியாத குழந்தையாக ராதிகா அழுது அடம்பிடித்தாள். மனதைக் கலங்கச் செய்யும் நிகழ்வாக அது அமைந்தது. சிறிய குழந்தை என்பதால், ராதிகாவின் கைரேகையைப் பதிவு செய்தது எங்களுக்குக் கடினமானதாக இருந்தது” என்று கூறியவர், இந்தப் பணி நியமனத்துக்கான நடைமுறை விவரத்தையும் உறுதிப்படுத்தினார்.

இந்திய ரயில்வே வரலாற்றில் பத்து மாதக் குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்படுவது இதுவே முதன்முறை. சிறுமி ராதிகா, தனது 18 வயதைப் பூர்த்தி செய்ததும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்த அரசுப் பணிக்குச் செல்லலாம்” என்று தெளிவுபடுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.