50 சதவீத ஆஃபர் – கேரள மாலில் 'நள்ளிரவு ஷாப்பிங்' செய்ய குவிந்த மக்கள் கூட்டம்

கொச்சி: கேரளாவின் பிரபல வணிக வளாகத்தில் நள்ளிரவு ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகமாக கூடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலத்தில் பிரபலமாக மால்களில் லூலூ மால். திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இரண்டு இடங்களில் செயல்பட்டு வரும் இந்த மால், கேரளாவில் பிறந்து வளர்ந்து அரபுநாட்டில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலிக்கு சொந்தமானது. சில நாள்கள் முன் இந்த மால் தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. ஜூலை 6 அன்று இரவு 11:59 மணி முதல் ஜூலை 7 விடியும் வரை லூலூ நிறுவனத்தின் இந்த இரண்டு வணிக வளாகத்திலும் அனைத்துப் பொருட்களுக்கும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு இந்த இரண்டு வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 50 ஆஃபர் அறிவிப்பால் இரவை பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் பொருட்களை வாங்குவதற்கு லூலூ மாலை முற்றுகையிட்டனர். ஒருகட்டத்தில் மால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. கேரளாவை ‘எப்போதும் தூங்காத நகரமாக’ மாற்றும் முயற்சியாக இந்த நள்ளிரவு விற்பனையை மால் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

நள்ளிரவு என்பதால் பெரிதாக மக்கள் கூட்டம் இருக்காது என்பதே அவர்களின் எண்ணமாக இருந்துள்ளது. ஆனால், அந்த எண்ணத்துக்கு மாறாக மக்கள் மால் முன்பு கூடினர். எஸ்கலேட்டர், கடைகள் உட்பட எங்கு பார்த்தாலும் மக்கள் நகர முடியாமல் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவின.

“நள்ளிரவு ஷாப்பிங் மூலம், மக்கள் அமைதியான சூழ்நிலையில் ஷாப்பிங் செய்ய முடியும். சோதனை அடிப்படையில் நாங்கள் இதை ஒரு நாளுக்கு அறிமுகப்படுத்தினோம். இதில் சில தடைகளை சந்தித்தோம். இருப்பினும், அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதை எவ்வாறு அனைத்து நாட்களும் நடைமுறைப்படுத்துவது என்பதற்கேற்ப திட்டமிடுவோம்” என்று லூலூ மால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு மீண்டும் கேரள மாநிலத்தில் அதிகமாகி வரும் நிலையில், அதைப் பற்றி கவலை கொள்ளாமல் லூலூ மாலில் மக்கள் கூட்டம் அதிகளவு கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பலர் வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.