Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பிவிடப்படும். நெல்சன் மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்றடையலாம். இது சனிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளது.
அமர்நாத் மேகவெடிப்பு
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகினர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை
முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், 963 சவரன் நகை, 23.96 கிலோ வெள்ளி, ரூ 41.06 லட்சம் கண்டறியப்பட்டன. கணக்கில் வராத ரூ 15.50 லட்சம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ஜப்பான் நரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் காயமடைந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67. ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நாகபட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
“அறிவுக்கு ஒவ்வாத மூட கருத்துக்களை தூக்கிச் சுமக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும், பொய்களும்தான் தேவை. மனிதர்களை பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்கள், உண்மையான ஆன்மீகவாதியாக நிச்சயமாக இருக்க முடியாது. மலிவான விளம்பரம் தேடும் வீணர்களிடம் I Don’t Care என்று சொல்லி நகருங்கள். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல; அவர்கள் ஆன்மிக வியாதிகள்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ரூ. 340 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 693 கோடி மதிப்பில் 1,74,169 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனி மாவட்டத்திலிருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தற்போது இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 2,452 ஆக உள்ளது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பிஎஸ் உடன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 29 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகள்!
உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 9) கடைசி நாள். http://www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்றலாம். இது தொடர்பான தகவல்களைக் 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18,840 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 43 பேர் உயிரிழந்தனர். 16,104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில் நேற்று முதற்கட்ட ஆய்வு நடந்தது. மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள தோப்பூர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை 35 கி.மீ. தொலைவுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி மற்றும் 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை ஒட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
அதிமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து, கட்சித் தலைமையகத்திற்கு போலீஸ் பாதுகாப்புக் கோரினார். சில சமூக விரோதிகள் கட்சி தலைமையகத்திற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.